புதுக்கோட்டை பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 16
நால்வர் நான்மணி மாலை - திருப்பெருந்துறை
@அண்டனூர் சுரா
நால்வர் மணி மாலை எனும் நூல் துறைமங்கலம் சிவப்பிரகாசர் என்பவரால் இயற்றறப்பட்டது. இவர் 'சிவ அநுபூதி செல்வர்', 'துறைமங்கலம் சிவப்பிரகாசர்', 'நன்னெறி சிவப்பிரகாசர்',
'நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள்' என்று அழைக்கப்படுகிறார். இவர் 17 ஆம் நூற்றாண்டு காலத்தவர்.
நால்வர் நான்மணி மாலை என்பது அப்பர், சுந்தரர், சம்பந்தர் , மாணிக்கவாசகர் எனும் நால்வரைப் பாடும் நூலாகும். ஒவ்வொருவர் குறித்தும் பத்துப் பாடல்கள் மூலம் நாற்பது பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
நால்வரில் மாணிக்கவாசகர் குறித்த பாடல்களில் பெருந்துறை எனும் திருப்பெருந்துறை எனும் ஊர் மூன்று பாடல்களில் பாடப்பட்டுள்ளது. இவ்வூர் இன்று ஆவுடையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது.
பாடல் -01
பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே
வாசகம் அதற்கு வாச்சியம்
தூசகல் அல்குல் வேய்த் தோளிடத் தவனே.
இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் இறைவனுடைய பேரின்ப அருளில் ஆழ்ந்தவர் என்கிறது.
பாடல் -02
வேண்டுநின் அடியார் மெய்யன் பெனக்கும்
அருள்செய் சிவனே அலந்தேன் அந்தோ
முறையோ முறையோ இறையோ னேயென்று
அழுது செம்பொன் அம்பலக் கூத்தன்
அருளாற் பெற்ற அன்பினில் ஒருசிறிது
அடிய னேற்கும் அருளல் வேண்டும்
நீயே கோடல் நின்னருட் பெருக்கிற்கு
ஏற்ற தன்றிள ஏறுகந் தேறியைப்
பரிமா மிசைவரப் பண்ணிய வித்தக
திருந்திய வேத சிரப்பொருள் முழுவதும்
பெருந்துறை இடத்துப் பெருஞ் சீர்க்
குருந்துறு நிழலிற் கொள்ளை கொள்வாயே. (பாடல் -2)
இந்தப் பாடலில்
வேதத்தின் பொருள் முழுவதையும் பெருந்துறையிலுள்ள குருந்த மர நிழலில் அவனிடமிருந்து கொள்ளையடித்துக் கொண்டவன் நீ என்கிறது.
பாடல் -03
திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
நீழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்
தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
வாசகன் புகன்ற மதுர வாசகம்
யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்
பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்
ஓதின் முத்தி உறுபயன்
வேதம் ஓதின் மெய்பயன் அறமே.
இந்தப் பாடல் வரிகள் இறைவன் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறையில் சிவஞானம் பெற்று இறைவனது பேரானந்தத்தை மாணிக்கவாசகர் அடைந்த நிலையையும், அந்த ஆனந்தம் நிகரில்லாதது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.


கருத்துகள்
கருத்துரையிடுக