புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06

 @அண்டனூர் சுரா 

மதுரைக்காஞ்சி

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டில்  மிக நீளமான பாடல்களைக் கொண்டது மதுரைக் காஞ்சி. மாங்குடி மருதனார் எனும் புலவரால் இயற்றப்பட்டது. இப்பாடலின் மொத்த அடிகள் 782.

மதுரைக் காஞ்சி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியலை உணர்த்துவதாய் பாடப்பட்டதாகும். இந்நூல் பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் பாடுகின்றது. மேலும் பாண்டிய நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது.

இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றி பாடுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மீது
மாங்குடி மருதனார் பாடினார்.

அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்

மதுரைக்காஞ்சி  345 ஆவது வரியில் அழும்பில் எனும் ஊர் பாடப்பட்டுள்ளது. 

மான விறள் வேள் எனும் மன்னன் அழும்பில் எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிகிறான்.  இவன் மதுரையின் வளம் செழிப்பை உணர்ந்து மதுரை நகர் மீது படையெடுக்கிறான்.  அப்பொழுது மதுரையை ஆண்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன். இவனோடு போரிட்டு மான விறள்  வேள் தோற்றுவிடுகிறான். தோற்றாலும் அவனது போர்த்திறம் பாண்டிய நெடுஞ்செழியனை வியப்பூட்டுகிறது. அவனிடமே அழும்பில் ஊரைக் கொடுத்து பாண்டிய அரசுக்கு உட்பட்டு ஆட்சி செய்துகொள்ள பணிக்கிறான். மான விறள் மன்னனும் அப்படியே ஆட்சி செய்கிறான். இதன்படி அழும்பில் ஊர் பாண்டிய அரசுக்கு உட்பட்ட ஊராக மாறுகிறது.

பிறகு அழும்பில் மீது சோழ மன்னன் பெரும்பூட் சென்னி படையெடுக்கிறான். இப்போரில் சோழன் வென்று அழும்பில் சோழ நாடாகிறது.

சோழனிடம் தோற்றப்போன மான விறள் வேள் அடைக்கலம் தேடி மதுரைக்கு ஓடுகிறான். பாண்டியன் நெடுஞ்செழியன் மான விறள் இதற்கு முன்பு தன்னை எதிர்த்தவன் என்று பாராது இவன் மதுரையில் மன்னனைப் போல வாழ்ந்துகொள்ள அடைக்கலம் கொடுக்கிறான் . இதன்மூலம் பகைவனும் நாடற்றவனும் வாழ்ந்துகொள்ள  இடம் கொடுத்தவன் என்கிற புகழை அடைகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன்.  இதைத்தான் மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார்  இவ்வாறு பாடுகிறார்.

நிலனும் வளனும் கண்டு அமைகல்லாவிளங்கு பெருந் திருவின் மான விறல் வேள்அழும்பில் அன்ன, நாடு இழந்தனரும்  (345)

கொழும் பல் பதிய குடி இழந்தனரும்,தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த,
அண்ணல் யானை, அடு போர் வேந்தர்இன் இசை முரசம் இடைப் புலத்து ஒழிய,பல் மாறு ஓட்டி, பெயர் புறம் பெற்று (350)

மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்,விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை,தொல் வலி நிலைஇய, அணங்குடை நெடு நிலை,நெய் படக் கரிந்த திண் போர்க் கதவின்,மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு (355)

வையை அன்ன வழக்குடை வாயில்,வகை பெற எழுந்து வானம் மூழ்கி,சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல்,யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் (360)


இப்பாடலின் பொருள்

நிலத்தையும் வளமையையும் கண்ட காட்சி முடிவு இல்லாது விளங்கும் பெரும் செல்வத்தை உடைய, மான விறல் வேள் என்ற மன்னனின் அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும், செல்வமுடைய பல ஊர்களில் உள்ள குடிகளை இழந்தவர்களும் மதுரையில் தங்கிக்கொள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் அடைக்கலம் கொடுத்தான் என்கிறது இந்தப் பாடல்.



அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சியைத் தொடர்ந்து சிலப்பதிகாரம் ஓரிடத்தில் அழும்பில் குறித்து பாடுகிறது. இது குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14