புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -15

திருமயம் காட்டுபாவாசாகிபு ஆண்டவர் காரணக் கும்மி


@அண்டனூர் சுரா

கும்மி என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று.  ஆண்கள்,  பெண்கள்,  குழந்தைகள் வட்டமாக நின்று, கைகளைக் கொட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் ஆடும் ஒரு பாரம்பரிய நடனம் மற்றும் பாடல் மரபு ஆகும். இந்த கும்மி ஆட்டத்திற்காகவே எழுதப்பட்ட இலக்கிய வடிவமே கும்மி இலக்கியம் ஆகும்.

கும்மி இலக்கியத்தில் சிறுத்தொண்டர் நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி முக்கியமானதாகும்.

திருமயம் காட்டுபாவா சாகிபு ஆண்டவர் காரணக்கும்பி எனும் இந்த இலக்கியம் அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் அவர்களால் இயற்றப்பட்டது.

அருள்வாக்கி அப்துல் காதிர் ( பிறப்பு -  1866 ஆம் ஆண்டு கண்டி – போப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர்). இஸ்லாமிய ஆன்மீகக் கவிஞர், சந்தத் திருப்புகழ்ப் பாடிய புலவர் என அடையாளம் காணப்பெற்றவர்.

அருள்வாக்கி என்பது பதினாறு வயதில் யாழ்ப்பாணத்தில் புலவர்கள் மத்தியில் தனது செய்யுளாற்றலை வெளிப்படுத்தி 'அருள்வாக்கி' எனும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஒளிபாய்ச்சியவர்களில் ஒருவர். பதங்கள், சிறப்புப் பாயிரங்கள், சாற்றுக்கவிகள், வாழ்த்துக்கவிகள், சரமகவிகள், சீட்டுக்கவிகள் என்று பாடியுள்ளார். இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதி காலத்தவர். இருபத்து எட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார்.

 இவர் இயற்றிய நூல்களில் ஒன்று "திருமயம் காட்டுபாவா சாகிபு ஆண்டவர் காரணக்கும்மி". 

காட்டுபாவா பள்ளிவாசல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் மிக முக்கியமான வழிபாட்டுத் தளம். காட்டுபாவா சாகிப் பிராமணப் பெண்களைக் கள்வர்களிடமிருந்து காப்பாற்றி உயிர்த்துறந்தார்.  ஒரு பெரியவர் கனவில் தோன்றி சொன்னதன் பேரில்  நவாப் ஆட்சிக்காலத்தில் காட்டுபாவா உயிர் துறந்த இடத்தில்  தர்கா எழுப்பப்பட்டு இன்று அனைத்து சமயத்தவர்களும் வழிபடும் தலமாகியுள்ளது.

இந்நூல், காட்டுபாவா சாகிப்பின் வீரம், அன்பு, காதல், பக்தி முதலான நவரசச் சுவைகளையும் அடக்கியதாக இக்காரணக் கும்மிப் பாடல்கள் அமைந்துள்ளன.

நாகூர் ஆண்டவர் எனப் போற்றப்படும் சாஹுல் ஹமீதொலி நாயகரின் பேரன் இவர்.  காட்டு பாவா சாகிபு அவர்களின் வீரத்தையும் தியாக வரலாற்றையும் அன்னார் நிகழ்த்திய அற்புதங்களையும் இக்கும்மி இலக்கியம் பாடுகின்றன.

இந்நூலின் முகப்பு இவ்வாறு கூறுகிறது. திருப்பத்தூர் ஆ.பி.அல்லாபிச்சை ராவுத்தரவர்கள் குமாரரும் அதே ஊர் வித்துவசிரோமணி மகுமூதுமுத்துப்பாவாப் புலவரவர்களின் மாணாக்கருமாகிய அருள்வாக்கி அப்துல் காதிறுப்புலவரவர்கள் இயற்றியது. 

இந்நூல் கொழும்பு கும்பனித் தெருவில் புத்தகவியாபாரம் எம். எஸ். முகியித்தீன் சேராமுதலியார் அவர்கள் முயற்சியால் சென்னை வாணீவிலாச அச்சுக்கூடத்திற் பதிக்கப்பட்டது. ஆண்டு – 1905.

இருபத்து நான்கு பக்கங்களில் அமைந்த இந்நூலில் 92 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்குச் சாத்துகவி பாடியிருப்பவர் சிவகங்கை இராஜசமஸ்தான வித்துவான் பொன்னுசாமி கவிராஜர்.

புகழ்க்கவி சீறாப்புராணீகர் மரபினராகிய மதுரை ஜில்லா கஸ்பா மேலூர் நா.க.உ. கல்விக்களஞ்சியப் புலவர், கீழ்க்கரை இயற்றமிழ் நாவலர் ம.வு.ம.செய்யிது முகம்மது அலியார், ஸ்ரீமான் காதிறுமுகியித்தீன் என்னும் எம்.எஸ்.முகியித்தீன் சேராமுதலியார் மற்றும் கீழக்கரை மகா –ரா-ரா-ஸ்ரீ ச.கா.முகம்மது ஸதக்குத்தம்பி ஆலிப்புலவரவர்கள்.

இந்நூல் கீழ்காணும் தலைப்புகளில் கும்மிப் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன.

மரபுவழி,
அவுலியாக்களின் ஸியாறத்துக்குப் புறப்படுதல்,
பாதை போந்தது,
திருமயத்தூரார் விருந்தளித்தது,
காட்டுவழி போகுதல்,
எழுபிராமணப் பெண்கள் வருதல்,
பிராமணப் பெண்களோடு வழிநடந்தது,
கானகத்தியல்பு,
கள்வர்கள் வருதல்,
கற்பாறை கண்டது,
கருங்கற்பாறையில் நீரழைத்தது,
கள்வர் வளைந்தது,
கள்வரோடுபோர் புரிந்தது,
பிராமணப் பெண்கள் மூர்ச்சையடைந்தது,
நாயகர் ஷஹீதானது,
கள்வர்பெண்களுக்கு அம்புதொடுத்தது,
பிராமணப்பெண்கள் பரிதாபித்தது,
கள்வர் கண்களைக் குருடாக்கி மீட்டியது, கள்வர் பெண்களுக்கு வழிகாண்பித்தது,
ஓர் பெரியோர் கனவு கண்டது,
நாயகரையடக்கஞ் செய்தது,
நாயகர் செய்த அற்புதங்கள்,
சென்னை நவாபு தறுகா என்னும் ஆலயங்கட்டியது,
மானிபம்விட்டது,
உற்சவ வினோதம்,
கொடைநாயகன்புகழ்ச்சி,
வாழி


பாடப்பட்டுள்ள கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை

இந்தக் கும்மிப் பாடலில் புதுக்கோட்டை,  கந்தர்வகோட்டை ஊர்கள் பாடப்பட்டுள்ளன.

நாகூரில் பிறந்த காட்டுபாவா தஞ்சை வழியாக கந்தர்வகோட்டை,  புதுக்கோட்டை வழியே திருமயம் வந்தடைகிறார். அங்கு கள்ளர்களால் பிராமணப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட காட்டுபாவா சாகிப் அவர்களைக் காப்பாற்றி உயிர்த்துறக்கிறார்.

இந்தக் கும்மியில் பாதை போந்தது எனும் தலைப்பின்கீழ் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை ஊர்கள் இவ்வாறு பாடப்பட்டுள்ளன.

தங்கள் வயது மெழுபதக் காலந்
    தனித்துக் குதிரை மிசையேறித்
துங்க முடனாக பட்டினத் தூர்வழித்
   தூண்டவிட் டார்பரி தாண்டினதே  - (தானனந் )

பஞ்ச கதிகளைக் கொண்டெழுந் தேபரி
      பாய்ந்து தஞ்சைப்பதி மார்க்கமதாய்க்
கஞ்ச மலர்த்தடம் வாவியுஞ் சோலையுங்
      கண்டு நடந்து களிப்பாக- (தானனந்)

தஞ்சா வூர்ப்பதி விட்டுக் கண்டகோட்டை
      தானுந் கடந்து புதுக்கோட்டை
மஞ்சுல வும்பொழில் மார்க்கம் தாய்ப்பெரு
     வழி கடந்தனர் மாதவரே- (தானனந்)

அன்னங்கள் வாழுந் தடஞ்சோ லைமயில்
      ஆடிடுங் குங்குமச் சோலைகளும்
வன்னமுடனே பரிநடத் தித்திரு
     மயமெ னும்பதி கிட்டினரே  - (தானனந்)

இப்பாடலில் இன்று கந்தர்வகோட்டை என்று அழைக்கப்படும் ஊர் கண்டகோட்டை என்று பாடப்பட்டிருப்பதன் மக்களின் வழக்கை அப்படியே பாடியிருப்பது தெரியவருகிறது. கல்வெட்டின் படி இவ்வூர் கண்டரகோட்டை. கண்டரகோட்டை- கண்டகோட்டை- கந்தர்வகோட்டை என்பதாக மருவி வந்துள்ளது.

புதுக்கோட்டை எனும் ஊரைப் பாடிய முதல் இலக்கியம் திருமயம் காட்டுபாவா சாகிப் காரணக் கும்மி என்றே அறியமுடிகிறது. தற்போது புதுக்கோட்டை  அழைக்கப்படும் புதுகை எனும் பெயரை இலக்கியத்தில் பாடியது இந்த இலக்கியம்தான். இது குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06