புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -13

திருப்பெருந்துறைப் புராணம்


@அண்டனூர் சுரா

சமய நெறியில் தனிச்சிறப்பு வாய்ந்த கலைகளில் புராணக்கதைகளும் ஒன்று. இப்புராணக் கதைகளில் ஒரு கூறே தல புராணம்.  புதுக்கோட்டை நிலப்பகுதிக்கு உட்பட்ட தல புராணங்களில் திருப்பெருந்துறை புராணம் முக்கியமானதாகும். இப்புராணத்தை இயற்றியவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தைச் சார்ந்த சுந்தரலிங்க முனிவர் என்று இந்நூல் பாயிரத்தின் வழியே அறியமுடிகிறது.

திருவளரும் பெருந்துறைமான் மியத்தையருஞ்
       செந்தமிழாற் றிசைகள் போற்ற
அருளுதவு துறைசையின்வாழ் திருச்சிற்றம்
        பலகுருவி னடிமை மேலாய்
மருவியஞா னப்பொருள்சேர் கல்வியின்றன்
      எல்லையுணர் மதுர வாக்கி
இருநிலத்தோர்க் கமுதெனச் சுந்தரலிங்க
     முனிவரன்றா னியம்பி னானே.

இப்பாயிரத்தால் இந்நூலாசிரியர் சுந்தரலிங்க முனிவர் என்று அறியமுடிகிறது.

ஓலைச்சுவடியாக இந்தப் புராணத்தை தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் படியெடுத்து நூலாக்கம் செய்திருக்கிறது. தஞ்சைக் கரந்தைப் புலவர் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் பாவலரேறு திரு. ச. பாலசந்தரம் அவர்கள் இந்நூலை பதிப்பித்துள்ளார்.

இந்நூல் 1976 ஆம் ஆண்டு பதிப்பிக்கையில் திருப்பெருந்துறை தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி வட்டத்தில் கீழைக் கடலோரத்தில் அமைந்த ஊராகவும் சைவத் திருத்தலமாகவும் இருந்தது. அப்பொழுது முதல் இவ்வூர் ஆவுடையார்கோயில் என்று அழைக்கப்பட்டது.

ஒரு காலத்தில் இவ்வூர் துறைமுகமாக இருந்திருக்க வேண்டுமென்றும் கடல் கடந்த அயல் நாட்டிலிருந்து அனேக கலங்களில் குதிரைகள் இங்கே வந்து இறங்கியதாக இப்புராணத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இப்புராணம் இரண்டாயிரம் பாடல்களுக்கும் மேல் கொண்டிருந்து ஓலைச்சுவடியில் சிதையாமல் கிடைத்தவை கடவுள் வாழ்த்து முதலாக 58 சருக்கங்களையும் 1948 செய்யுள்கள் மட்டுமே.

இப்புராணத்தில் இறைவன் மாணிக்கவாசகருக்கு காட்சிக்கொடுத்த கதையை ஒரு சருக்கமாக கூறியுள்ளார்.

கடவுள் வாழ்த்தில்  விநாயகரை முதல்வதாக பாடி தொடங்குகிறது. குருந்த மரத்தின் பெயரால் குருந்தப் பெருமானை அடுத்ததாகவும் பாடுகிறது.

நாட்டுச் சிறப்பு எனும் படலத்தில் பாண்டிய நாட்டின் வளம் மருத நில மக்களின் வாழ்க்கை, வெள்ளாற்று நீர்வளம்,  இவற்றோடு மதுரை , திருப்பூவணம் முதலான பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் பதினான்கைப் பாடுகிறது.

இப்புராணம் இவ்வூருக்கு சிவயோகவனம்,  சித்தியோகவனம்,  சன்னவனம், ஆதிகயிலாயம், சதுர்வேதபுரம், சிவபுரம்,  சிவகேத்திரம், பவுத்திரமாணிக்கம், பெருந்துறை, சதுர்வேதநற்புரம், ஆதிகயிலாயம், சன்னவனம், சிவயோகவனம், குருந்தூர் என்று பல பெயர்களை வழங்குகின்றது.

கேத்திர மகிமைச் சருக்கத்தில் எலும்பும் சிவலிங்கம் ஆவதைப் போல ஒரு கதை பாடுகிறது. ஓர் அந்தணன் பாண்டியனிடம் தானம் பெற வந்தான். அவன் காட்டில் ஒரு புலியால் அடித்துக் கொல்லப்பட்டான். அவனது மைந்தன் மாடகன் பல வேள்வி அமைத்தும் மோட்சம் கிடைக்கவில்லை. கங்கையில் ஆஸ்தியை கரைத்தால் மோட்சம் கிடைக்குமென்று கொண்டுசென்றான். வழியில் வெள்ளாறு குறுக்கிட்டது. எலும்பை கரையில் வைத்துவிட்டு நீராடி திரும்பி வந்து பார்த்தான். அந்த எலும்பு சிவலிங்கம் ஆகி அவனது தந்தை தேவ விமானத்தில் சென்றார். சென்றவர் இத்தலத்தின் மகிமை இதுவென்று எடுத்துக்கூறுவதைப் போல இந்தச் சருக்கம் படைக்கப்பட்டுள்ளது.


மாணிக்கவாசகரின் குதிரை வாங்கிய கதை

பாண்டிய நாட்டின் தென்புறம் வாதவூரில் ஆமாத்தியர் எனும் குலத்தில் மாணிக்கவாசகர் பிறக்கிறார். சிறிய வயதிலேயே கல்வி ஞானத்தில் சிறந்து விளங்குகிறார். இதை அறிந்த பாண்டிய மன்னன் தன் அவையில் முதலமைச்சராக அமர்த்தி தென்னவன் பிரமராயன் என்று பட்டம் சூட்டுகிறார்.

அப்பொழுது பெருந்துறை ஒரு துறைமுகமாக விளங்குகிறது. அங்கு அயல்நாட்டு பரிகள் வந்து இறங்குகின்றன. இதை அறிந்த பாண்டியன் வாதவூரானிடம் பொன்னும் பொருளும் கொடுத்து நாட்டுக்குத் தேவையான பரிகள் வாங்கிவர அனுப்புகிறான்.

மறுநாள் வாதவூரான் அவரது பரிவாரங்களுடன் பெருந்துறை செல்கிறார். அங்கு ஒவ்வொரு பொருளும் இறை வடிவமாய்த் தெரிகிறது.  ஆங்கே ஒரு குருந்த மரத்தின் கீழ் மாணாக்கர்கள் அமர இறைவன் தக்கணாமூர்த்தி வீற்றிருக்கிறார். அவரைக் கண்டு வாதவூரான் கைக்கூப்பி வணங்குகிறார். அவரிடம் தன்னை மாணவனாக ஏற்க வேண்டுகிறார். தக்கணாமூர்த்தியும் அவரை ஏற்று வாதத் திறமையைக் கற்றுக்கொடுத்து இத்திருப்பெருந்துறையில் ஆலயமைத்துப் பணிபுரிய வேண்டி மறைகிறார். வாதவூரான் இவ்வாறே பாண்டிய மன்னன் கொடுத்த பொன், பொருளைக் கொண்டு ஆலயம் எழுப்புகிறார். அத்துடன் அந்தணர் முந்நூறு பேருக்கு மனை அமைத்துக் கொடுக்கிறார்.

பாண்டிய மன்னனின் பரிவாரங்கள் மன்னனிடம் சென்று நடப்பதை கூறுகிறார்கள். மன்னன் மாணிக்கவாசகரை அழைத்துவர பணிக்கிறார். வாதவூரான் இறைவனை வேண்ட இறைவன் , " நீ அமைச்சர் கோலத்தில் மதுரை சென்று மன்னனிடம் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வருமென்று கூறி இம்மணியைக் கொடு" என்று பணிக்கிறார். வாதவூரான் அவ்வாறே மதுரை சென்று அரசனிடம் சொல்கிறார். பிறகு ஆலவாயண்ணலைச் சென்று வழிபட்டு குதிரைகள் வரும் நாளைக் காத்திருக்கிறார்.

ஆவணி மூல நாளன்று குதிரைகள் வருமென்று எதிர்பார்த்த அரசன் குதிரைகள் வரவில்லை என்பதை அறிந்து கோபம் கொண்டு தான் கொடுத்த பொன் பொருட்களைக் கேட்கிறார். அதற்காக வாதவூராரை வதைக்கிறார்கள். இறைவன் குருந்தவனத்தில் உள்ள நரிகளை எல்லாம் பரிகளாக மாற்றிப் பூதகணங்களைக் குதிரைச் சேவகர்களாக நியமித்து படைசூழ வருகிறான். அரசனுடைய தூதர்கள் பரிகள் வரும் சிறப்பை அரசனிடம் சென்று கூற அவன் அகமகிழ்ந்து வாதவூரரை அழைத்து தன் செயலைப் பொறுத்தருளக் கூறி வேண்டுகிறார்.

குதிரைகள் கயிறு மாற்றி கொடுக்கப்படுக்கிறது. வேதமா ஒன்றைத் தவிர ஏனைய பரிகள் கயிறு மாற்றிக் கொடுக்கிறான் இறைவன். அரசன் அவற்றை அரண்மனைக் குதிரைப் பந்தியிடத்தில் கொண்டுசேர்க்க ஆணையிட்டுத் தன் இருப்பிடம் செல்லுகிறான்.

அன்றைய இரவே பரிகள் எல்லாம் நரிகள் ஆயின. நரிகள் கயிறுகள் அறுத்துக்கொண்டு அங்கு கட்டப்பட்டிருந்த ஒட்டகங்களையும் குதிரைகளையும் கடித்துக் குதறின. பசி அடங்காமல் தெருக்களில் புகுந்து மக்களை வேட்டையாடின. மக்கள் அஞ்சி நடுங்கி ஆலவாயண்ணலே என்று அபயக் குரலெழுப்பி நரிகளை விரட்ட ஆனை பிறப்பித்தான்.  இறைவன் நரிகள் காடு செல்ல ஏவினான்.  அவ்வாறே நரிகள் காடு சென்றடைந்து.

இந்தப் புராணத்தில் மாணிக்கவாசகர் வாதவூரான் என்று குறிப்பிடப்படுகிறார்.

நாராயண தீர்த்தச் சருக்கத்தில் புலைச்சேரியும் அதில் வாழும் மக்களும் நாய்களுக்கு ஒத்த மக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஒரு வைணவன் சிவ நாமத்தை வெறுத்து பலிக்கிறான். அவன் புலைச்சேரியில் நாயாகப் பிறந்து துன்புற்று  அந்த நாய் ஒரு பன்றியால் துரத்தப்பட்டு நாராயண தீர்த்தத்தில் வீழ்ந்து அந்நீரைப் பருகி பாவங்கள் நீக்கப்பட்டான். இப்படியாக புலைச்சேரி மூன்று இடங்களில் பாடப்பட்டுள்ளது.

இப்புராணம் அந்தணர்களை மிகைப்படுத்தியும் திருப்பெருந்துறை அந்தணர்களுக்குச் சொந்தமான ஊர் என்பதை நிறுவும் பொருட்டு வலிந்து இயற்றப்பட்டுள்ளது.  மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளாலும் புலைச்சேரி  மக்களைப் பெரிதும் தாழ்த்தி இயற்றி இருப்பதால் இப்புராணம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06