புதுக்கோட்டைப் பகுதிகளைப் பாடும் இலக்கியங்கள் வரிசை – 12

வெள்ளாற்றுச் சருக்கம் – திருப்பெருந்துறைப் புராணம்.

@அண்டனூர் சுரா

சுந்தரலிங்க முனிவர் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம் புதுக்கோட்டை நிலப்பகுதியைப் பாடும் முக்கியமான புராணம் ஆகும். இந்தப் புராணம் மற்றும் இதை இயற்றியவர் குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன். முந்தைய பதிவின் தொடர்ச்சியாக வெள்ளாற்றை பாடும் வெள்ளாற்றுச் சருக்கம் குறித்து இந்தப் பதிவில் எழுதுகிறேன்.
 
வெள்ளாற்றுச் சருக்கம்
 
திருப்பெருந்துறை புராணம் கதையில் 42 ஆவது சருக்கமாக வெள்ளாற்றுச் சருக்கம் பாடப்பட்டுள்ளது.

சுவேதகேது என்னும் பாண்டிய மன்னன் நாட்டின் வளங்களைக் காண சுற்றி வருகிறான். இவன் செங்கோன்மையும் சிவநெறியும் கொண்டு வாழ்ந்துவருகிறவன். அப்படியாக வலம் பொழுது சோழ நாட்டு பொன்னி நதியைப் போல ஒரு நதியும் பாண்டிய நாட்டில் இல்லையே என்று கவலை கொள்கிறான். சோழ நாட்டு பொன்னி நதியைப் போல வெள்ளாற்றையும் பெருக்கெடுக்கச் செய்ய விரும்புகிறான். தனது ஆட்சிப் பொறுப்பை அமைச்சனிடம் ஒப்புவித்துத் தான் இமயம் சென்று கடும்தவம் புரிகிறான்.
 
மன்னின் தவத்தைப் பார்த்த பிரமன் பாண்டியனின் விருப்பதை உணர்ந்து ஒரு தெய்வ நதியை பெண்ணுருவில் வரவழைத்து அதற்குச் சுவேத நதி என்று பெயரிட்டு பாண்டிய நாட்டை வளப்படுத்துக என்று அனுப்பி வைக்கிறான்.



பாண்டியன் அந்நதி மகளைச் சைய மலையில் வைத்து தவமிருக்கிறான். பிரமன் தோன்றி அதனை பொன்னி நதியோடு இணைத்து எல்லா சிறப்பையும் அளித்து இரு கூறாகப் பிரித்து ஒரு கூறு சிவபுரத்தினைச் சூழ்ந்தும் மற்றொரு கூறு சிதம்பரத்தினைச் சூழ்ந்தும் வளம் செய்யுமாறு பணிக்கிறான். அந்நதி அவ்வாறே பெருகி வெள்ளாறு என்னும் தமிழ்ப் பெயரோடு பல வளங்களையும் புரிந்து அருள்கிறது.
 
இந்நதியில் சிவலிங்கப் பிரதிட்டை செய்வோரும் தவமியற்றுவோரும் வில்வ முதலிய தருக்களை வைத்து வளர்ப்போரும் எய்தும் பேறு இவை என்று தவமியர் கூறுவதாக இந்த வெள்ளாற்றுச் சருக்கம் பாடப்பட்டுள்ளது.

இச்சருக்கம் பாடியுள்ள சில பாடல்கள்
 
 
வெள்ளாற்றுச் சருக்கம்
 
(ஏழுசீர் ஆசிரிய விருத்தம்)
 
1. (புரூவன் வெள்ளாற்று மகிமையை உரைத்தருள முனிவனை வேண்டுதல்)

தவமணிந் தேத்துந் தவவுரு வனைய
தவுமியத் தலைவநீ சொற்ற
சிவபுர மகிமை தன்னில்வெள் ளாறு
சிறந்துள தென்றனை யதன்றன்
உவமையில் வரலா றெவையுமோர்ந் தறிய
உரைத்தருள் புரிகென முனிவன்
சிவமல தறியாப் புரூரவா வுள்ளந்
தெருளுறச் செப்பல்மே யினனால்


2. சுவேதகேது பாண்டியன் சிறப்பு

வளவர் தங் குலத்தில் வந்தவ தரித்து
       மனுநெறி புறக்குமோ ரரசன்

கிளர் தரும் பலநூற் றெளிவுளன் சுவேத
      கேதுவென் றரும்பெய ருடையோன்
உளமலி திறத்தாற் றன்வச மெனப்பூ
        வுலகெலா மாக்கிய வுரவோன்
அளவகல் புகழோன் கொடையினில் முகிலே
         யாடுமனு மாதர வுடையோன்

3. (பாண்டியன் தன்நாட்டுவளங்காணப் புறப்படல்]

தன்குடை நிழற்கீழ் வாழுமெவ் வுயிர்க்குந்
       தாயென விருந்தருள் புரிவோன் பொன்விளை தன்பூ வெங்கணு முளநற்
      புண்ணியத் தலங்கள்மன் றங்கள்
ஒன்றொரு கோடி யாய்வளம் பெருக்கி
         உயிர்க்கெலா முறுந்துய ரகற்றி
மன்பதை புரக்கும் நாளிற்றன் றேச. 
         வளமெலாம் நோக்கவென் றெழுந்தான்

4. [சோழவளநாட்டின் பொன்னி வளங்கண்டு தலங்களை வழிபட்டு ஆவன செய்து மகிழ்தல்)

மந்திரத் தலைவர் சேனைகா வலர்கள்
       மறங்கெழு கருவியம் பதாதி
யெந்திரத் தேர்யா னைகளொடு புரவி
       எங்கணும் மொய்த்திட வெழுந்து
செந்திரு வளநா டெங்கணும் நோக்கித்
       திங்கள்வே ணியன்றிரு மாறன்
மந்திர மெவையுந் தாழ்ந்துபூ சனைகள்
       வரம்பிலா தியற்றிமா மறையோர்

5.  [பாண்டிநாடுகண்டு நதிவளமின்மை நோக்கி அக்குறைதீர்க்க எண்ணுதல்]

விருத்திகள் முதலா மறப்புற மெவையும்
      மிகவளர்த் தரும்பொன்னி நதியில்
திருத்திபெற் றோங்கும் குடியெலாம் நோக்கித்
      தென்றிசை பார்க்கவந் தனன்நா
டிருத்தலை நோக்குங் காலற லின்றி
       எங்கணும் அடவியாய் விளைவற்
றுருத்திடர் வேடர் குழுக்களா னிறைவுற்
   றெற்கமார்ந் திருப்பதைக் கண்டான்

6. [அரசுப் பொறுப்பை அமைச்சனிடம் விட்டுத் தான் தவமியற்றப் புறப்படல்]

நதியிலா மையிலிந் நாடரு கியதோர்
    நதியுள தெனிற்பொன்னி நாட்டுக்
கிதுவ திகமென் றெண்ணிட விளங்கும்
    இக்குறை தீர்ப்பனென் றுளத்திற்
றுதிபெறு மரசன் எண்ணின னுடன்றன்
     தொல்லர சாட்சியாம் உலகை
மதிதிக ழமைச்சன் தன்வச மாக்கி.   
       வளர் தவம் புரிவதற் கெழுந்தான்


7. [இமயமலையில் கடுந்தவம் புரிந்த பாண்டியனுக்குப் பிரமன் வெளிப்பட்டுக் காட்சிதரல்]

இமயமால் வரைக்கண் சென்றருந் தவம் பூண்
       டிரணிய கர்ப்பனை நினைந்து
கவர் தரு வருட மாயிர முணவு.      
      கழியநோற் றிருந்தனன் மலரோன்
இவனருந் தவத்தை நோக்கியோ திமத்தில்
    எதிர்ந்துமுன் னின்றனன் இறைகண்
டவசம தாக வெழுந்துவீழ்ந் திறைஞ்சி
      அஞ்சலி சென்னிமேன் முகிழ்த்து

8. [பாண்டியன் பிரமனைப் பலவாறுபோற்றி வணங்கப் பிரமன் வேண்டியவரம் கேளெனல்]

மறைமுத லாகுங் கலைமகள் கணவா
    மன்னுயிர்த் தொகையெலா முதவி
நறைமலர்ப் பொகுட்டின் அரசுவீற் றிருக்கும்
       நான்முகத் தண்ணலே பன்னாள்
நிறைதவ மாற்றும் முனிவர் புடைசூழ்
       நின்மலா பால்நிறத் தெகினப்
பறவைவா கனனே வதனையே கொடியாப்
  பரித்தருள புரிதரு மிறையே

31. [வெள்ளாறு என்னும் தீந்தமிழ் பெயரொடு பாய்ந்து பல்வளமும் பெருக்குதல்]

தென்றிசை வரும்வெள் ளாறெனுந் தெய்வத்
       திருநதி யதிகவே கமதாய்
ஒன்றிய கானத் துறுதருக் குலங்கீண்
       டோங்குவெம் பாறையைத் துரந்து
மன்றலங் கமல வாவிகா லோடை
         மடுக்கள்சேர் மருதமே யாக்கி
இன்றமிழ் புகழாக் கம்பல, தரும
        மேமுதல் நல்லன தொகுத்து

32. அருந்திறற் சுவேத கேதுவா மிறைவன்
         அவனினை வின்படி படர்ந்து
மருங்குள வசர சரமெலாம் வருந்தா
         வகைவளர்த் திருகரைப் புறத்தும்


33. பொருந்துமா லயங்கள் தமைத்திரைக் கரத்தால்
        பூவொடு நீர்சுமந் தேத்திப்
பெருந்துறை புகுந்து பெருநல மடைந்து
       பேணுமா ருததிசேர்ந் திடுமால்




34. [வெள்ளாற்றில் மூழ்கி வழிபட்டோர் எய்தும் சிறப்பும் பயனும் முனிவர் கூறுதல்]

யாதுகா மித்து மூழ்கினு முதவும்
     அப்புன லருந்திடின் அலைகள்
மோதும்வா  னதிபுக் காடுபே  றுளதா
     முடியினிற் றெளித்திடி லளகை
நாதனா மென்ன வைத்தருள் தருமந்
    நதிக்கரை வசித்திடிற் பாக
சாதன னாகும் உடலதிற் றெளிக்கச்
     சாருமேல்  விசும்பெலாந் தருமால்
 
35. நகமயி ரெலும்பு களிற்சிறி தந்த
       நதிதனி லிடப்பெறு வாரைத்
திகழ்மலர்த் தருவாழ் விபுதராய்ச் செயுமந்
       தியகிரி யைச்செயி லவன்முன்
மிகுகொடும் பாவி யெனவரு நரகில்
       வீ்ழ்த்தினு மீட்டெடுத் தருளும்
தொகுமரங் கல்புல் கிருமிபுள் விலங்கத்
       தோயநேர்ந் திடிற்பெறுஞ் சுவர்க்கம்
 
36. [இந்நதிக்கரையில் சிவலிங்கப் பிரதிட்டை செய்வோர் பெறும் பயன் கூறல்]

அத்திரு நதியின் கரையினிற் சிவலிங்
       கப்பிர திட்டைசெய் தன்பால்
வைத்திடின் கோடி லிங்கமற் றிடத்தில்
       வைத்துள பெரும்பயன் மருவிச்
சித்தமா சகற்றிப் பிறவியுந் தீர்ந்து
       சிவமதா குவர்சிவார்ச் சனையிற்
றத்துமந் நீர்கொண் டாட்டிலெஞ் ஞான்றும்
       தணந்திடா ததினுறுந் தாணு
 
37.  [இந்நதியில் வில்வ முதலாய் தருக்களை வைத்து வளர்ப்போர் எழுதும் பயன் கூறல் )
 
சூழ்கரை மருங்கோர் நறுந்தரு வில்வந்
       துழாய்கர வீரம்யா தேனும்
வாழ்வுற விருத்தப் பெற்றவ ரவரே
       வான் றரு நீழலின் வதிவோர்
ஆழ்புன லதன்றன் பெருமையா ரறிவர்
       அதற்கது நிகரலா துலகில்
தாழ்விலா தொன்றை எடுத்துவ மிக்கத்
       தகுவதன் றுத்தர நதியும்
 
38.  இரங்குவெண் டிரைவெள் ளாறெனும் பெயர்கொண்
       டெழுந்துவே கத்துட னுபய
மருங்கினுந் தரள மணிகொழித் தெழுந்து
       மலர்சுமந் தகில்முத லுருட்டி
நெருங்குபல் வளமப் புறமெலாஞ் செறித்து
       நேர்ந்துமூழ் குநர்க்கருள் சுரந்து
தரங்கநற் கரத்தாற் றலையுற வணங்கிச்   
       சாகரத் துறும்புகழ் தரித்தே.
 
39. [இச்சருக்கம் ஓதுவோர் கேட்போர் பெறும் பயன் கூறல்]

இயங்குபல் பெருமை நெருங்குவெள் ளாற்றின்
      இயல்பெடுத் தோதுமிச் சருக்கம்
நயம்பெற உரைத்து ளோர்செவிக் கொளுவோர்
        நடலைதீர்ந் தரனருட் பெருக்கின்
முயங்கிவாழ்ந் திடுவர் என்றருந் தவத்தோர் மொழிந்தன
         ரரசுகேட் டுவந்து
வியந்தனன் மகிமை சானுவி தனிலும்
    மிக்கதென் றுரைத்தனன் விரும்பி

[வெள்ளாற்றுச் சருக்கம் முற்றும்.]


அடுத்தப் பதிவில் திருப்பெருந்துறைப் புராணம் குறித்து எழுதுகிறேன்.
 
 
 
 
 

கருத்துகள்

  1. ஆகா! நமது வெள்ளாறு எவ்வளவு சிறப்புமிக்கது!அறிந்தேன்; அகம் மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06