புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை – 10
@அண்டனூர் சுரா
காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்தமிழ்ப் புலவர்களில் காளமேகப் புலவர் முக்கியமானவர். பாண்டிய நாட்டிலுள்ள திருமோகூர் எனும் ஊரில் அமையப்பெற்றுள்ள பெருமாள் கோவிலுக்கு காளமேகப் பெருமாள் என்று பெயர். இந்தப் பெயரால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப்பட்டார் என்று ஒரு சாராரும்; கவிதைக் கேட்கும் சடுதியில் காளமேகம் போல கவிதைப் பாடியதால் காளமேகப் புலவர் என்று அழைக்கப்பட்டார் என்று ஒரு சாராரும் பெயர்க்காரணம் தருகிறார்கள்.
காளமேகம் என்பது அவரது இயற்பெயர் என்று ஒரு சிலரும் இதை மறுத்து வரதன் என்பதுதான் இவரது இயற்பெயர் என்றும் சிலரும் வாதம் புரிகிறார்கள்.
இவர் விழுப்புரம் அருகில் எண்ணாயிரம் எனும் ஊரில் பிறந்ததாகவும், திருக்குடந்தைக்கும் அருகிலுள்ள நந்திக் கிராமத்தில் பிறந்ததாகவும் இருவேறு கருத்து உண்டு.
இவர் வைணவம்.
திருவரங்கம் கோவிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர். இக்கோவிலுக்கும் அருகே திருவானைக்காவில் சம்புகேசுவரராகச் சிவபிரான் கோவில் கொண்டுள்ளார். அதில் மோகனாங்கி என்ற தாசி இருந்தாள். இவள் நடனத்தில் வல்லவள். இவள்மீது காதல் கொண்டு இவளது வேண்டலின்பேரில் வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்.
சிலேடை மற்றும் வசைப்பாடுவதில் வல்லவர்.
இவர் பாடிய ஒரு தனிப்பாடல் திரட்டுகளில் 117 ஆவது பாடலாக பாண்டிய நாட்டுச் சிவத்தலங்கள் எவையெல்லாம் என்று பாடியுள்ளார்.
கூடல் புனவாயில் குற்றால மாப்பனூர்
ஏடகநெல் வேலி யிரா மேசம் – ஆடானை
தென்பரங்குன் றஞ்சுழியல் தென்றிருப்புத் தூர்காசி
வன்கொடுங்குன் றம்பூ வணம்.
இப்பாடல் குறிப்பிடும் தலங்கள்
1 .கூடல் – மதுரை,
2. புனவாயில் – திருப்புனவாசல்,
3. குற்றாலம் – திருக்குற்றாலம்,
4. ஆப்பனூர் – திருவாப்பனூர்,
5. ஏடகம் – திருவேடகம்,
6. நெல்வேலி – திருநெல்வேலி,
7. இராமேசம் – திருராமேச்சுரம்,
8. ஆடானை – திருஆடானை,
9. தென்பரங்குன்றம் – திருப்பரங்குன்றம்,
10. சுழியல் – திருச்சுழியல்,
11. திருப்புத்தூர் –திருப்புத்தூர்,
12. தென்காசி – தென்காசி,
13. வன்கொடுங்குன்றம் – திருக்கொடுங்குன்றம்,
14. பூவணம் – திருப்பூவணம்
இவையாவும் பாண்டிய நாட்டுத் தலங்கள். இவற்றில் புனவாயில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட திருப்புனவாசலாகும்.
இப்பாட்டிலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மீமிசல் பகுதிகள் பதினைந்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாடாக இருந்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது.

காளமேகப்புலவரின் நிலவியல் அறிவு வியக்கவைக்கிறது. நன்று.தொடர்க.
பதிலளிநீக்கு