புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 09
@அண்டனூர் சுரா
தேவாரம், ஏழாம் திருமறை
சுந்தரமூர்த்தி நாயனார் என்கிற சுந்தரர் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவர். மேலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்து சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதன்பிறகு இவர் பல சிவ தலங்களுக்குச் சென்று சிவனைப் பதிகமாகப் பாடியுள்ளார். தம்பிரான் தோழர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது சிவனுக்குத் தோழனாக இருந்து சேவை செய்தவர். இவரது பாடல்கள்
'திருப்பாட்டு' என்றும் 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
பதிகம் பாடிய பிறகு சிவனே சுந்தரர் விரும்பும்படியாக பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை அவருக்குத் திருமணம் செய்துவைத்தார்.
இவர் பாடிய தேவாரங்கள் ஏழாம் திருமுறையாக சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய மற்றொரு படைப்பான திருத்தொண்டத் தொகையை வழியொற்றியே சேக்கிழார் பெரியபுராணம் படைத்தார்.
இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர். இவர் 38000 பதிகங்கள் பாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் கிடைத்தவை 100 மட்டுமே.
ஏழாம் திருமுறையில் ஒரு பதிகம் புனல்வாயில் குறித்து பாடியிருக்கிறார். திருஞானசம்பந்தர் புனவாயில் ஊரை மருதம், முல்லை, நெய்தல், பாலை எனும் நாநிலமாக பாடியிருக்கிறார். ஆனால் சுந்தரர் புனவாயில் ஊரை முழுக்க பாலை நிலமாகவும் அத்தகைய பாலை நிலத்தில் ஊரின் செழிப்பைப் பாடியிருக்கிறார்.
இந்தப் பாட்டுகளில் சிவன் குறித்த வர்ணிப்பு, பாடுபொருளைத் தவிர்த்து புனல் வாயில் குறித்து எப்படி பாடியுள்ளார் என்று பார்ப்போம்.
பாட்டு - ஒன்னு
புனவாயிலை பழம் பதி என்கிறார் சுந்தரர். அதாவது பழமையான ஊர். மரப்பொந்துகளில் ஆந்தைகளின் பாட்டு ஒழியாத புனல் வாயில். ஆந்தை என்பது பாலை நிலப்பறவை. இதிலிருந்து இவ்வூர் பாலை நிலம் என்பதை அறியமுடிகிறது.
சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்!
மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி,
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.
பாட்டு - இரண்டு
வேடர்கள் ஆரவாரத்துடன் போர் புரியும் இடம் புனல்வாயில். வேடர்கள் வேட்டையாடி பசியாறுவதும் வீரப்புண் அடைவதும் குறிஞ்சி மற்றும் முல்லை திணைக்கு உரியது. வேடர்கள் அவர்களுக்காக போர் புரிவது வறட்சியின் வெளிப்பாடு. ஆகவே இந்தப் பாட்டும் பாலை திணையைக் காட்டுகிறது.
கருது நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது
மருத வானவர் வைகும் இடம், மற வேடுவர்
பொருது, சாத்தொடு, பூசல் அறா புனவாயிலே.
பாடல் - மூன்று
இங்குள்ள சிவன் எலும்பையும் பாம்பையும் அணிந்தவன் என்கிறார். இரண்டும் பாலை திணைக்குரியவை. மேலும் இங்கு பாம்பு என்பது இந்த ஊரையொட்டி பாயும் பாம்பாறு என்பதாவும் எடுத்துக்கொள்ளலாம்.
தொக்கு ஆய மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நக்கான், நமை ஆள் உடையான், நவிலும் இடம்
அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய்ப்
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே.
பாடல் - நான்கு
கடல் கரையிடத்து கற்குன்றுகளும் புதர்ப் பத்தைகளும் வெப்பமிகுந்த வெட்டவெளியும் கடலின் கானலும் கொண்ட ஊர் புனவாயில்.
வற்கென்று இருத்தி கண்டாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம்; அதுவே புகல்
கல்குன்றும், தூறும், கடு வெளியும், கடல் கானல் வாய்ப்
புற்கென்று தோன்றிடும் எம் பெருமான் புனவாயிலே.
பாடல் - ஐந்து
வேடர்கள் மானுக்குக் குறி வைக்க மான்கள் வெகுண்டு ஓடும் நிலம் புனல்வாயில்.
நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நல்லான் நமை ஆள் உடையான் நவிலும் இடம்
வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப்
புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.
பாடல் - ஆறு
சேவற்புறா பெட்டையைப் பிரிந்ததும் பெட்டை கள்ளிச்செடியில் ஏறி நின்று துணையைத் தேடும் புனவாயில்.
மறவல் நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறித் தன் பேடையைப்
புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே.
பாடல் - ஏழு
வேடர்கள் எந்நேரத்திலும் போர்ப்பறை இசைக்கும் ஊர் புனவாயில். பழம்பதி எனும் மிகப் பழமையான ஊர் என்பதைப் பெயராகக் கொண்டது.
ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்!
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி
தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப்
பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே.
பாடல் - எட்டு
பன்றி உலவும் நிலம், நெருப்பாக தகிக்கும் பூமி, கள்ளி முளைத்து புற்கள் வெப்பத்தால் கருகி போயிருக்கும் ஊர் புனவாயில்
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீவிழிக்கும்
இடம் செந்தறை
கள்ளி வற்றி, புல் தீந்து, வெங்கானம் கழிக்கவே,
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.
பாட்டு - ஒன்பது
கரியகாடும் புற்றும் கொண்ட ஊர். கார்க்கோழி இரை மேய்ந்து கூ கூ என்று கூவி அழைக்கின்ற ஊர்.
எற்றே, நினை! என்னொடும் சூள் அறு, வைகலும்!
மற்று ஏதும் வேண்டா, வல்வினை ஆயின மாய்ந்து அற;
கல்-தூறு கார்க் காட்டு இடை மேய்ந்த கார்க்கோழி போயப்
புற்று ஏறி, கூ கூ என அழைக்கும் புனவாயிலே.
பாடல் - பத்து
பொன் நீர் சூழ் புனல்வாயில். இப்பாடலைப் பாடிய சுந்தரர் நாவலூர் என்கிறது இப்பாடல்.
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை
அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன
மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க்
குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.
புனவாயில் ஊரை சுந்தரர் பழம்பதி என்கிறார். அதாவது பழைய ஊர். இந்த பதி என்கிற பின்னொட்டோடு புதுக்கோட்டையில் இன்னோர் ஊர் இருக்கிறது. என்ன ஊரென்று யோசித்து வையுங்கள். பிறகு எழுதுகிறேன்.


கருத்துகள்
கருத்துரையிடுக