புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -08
@அண்டனூர் சுரா
தேவாரம், மூன்றாம் திருமறை.
சைவத் திருமறை நூல்களில் ஒன்று தேவாரம். தே+ வாரம், தேவ+ ஆரம் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தே என்றால் தெய்வம். வாரம் என்றால் பாடல்.
வாரம் என்கிற சொல் தெய்வப்பாடல் என்கிற பொருளில் சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதையில் இடம்பெற்றுள்ளது.
'வாரம் இரண்டும் வரிசையிற் பாட'
இதன்படி தெய்வத்தைப் பாடும் பாடல் என்கிற பொருளில் தேவாரத்தைப் புரிந்துகொள்ளலாம்.
மேலும் தேவ+ஆரம்- தேவாரம். ஆரம் என்றால் மாலை என்று பொருள். தேவனுக்கு மாலையாக அனுவிக்கும் பாடல் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
தேவாரத்தில் 274 சிவதலங்கள் பாடப்பட்டுள்ளன.
சோழநாட்டுத் தலங்கள் 190,
ஈழநாட்டுத் தலங்கள் 2,
பாண்டிய நாட்டுத் தலங்கள் 14, மலைநாட்டுத் தலங்கள் 1, கொங்குநாட்டுத் தலங்கள் 7, நடுநாட்டுத் தலங்கள் 22,
தொண்டை நாட்டுத் தலங்கள் 32, துளுநாட்டுத் தலங்கள் 1,
வடநாட்டுத் தலங்கள் 5.
காவிரி கரை தலங்கள் மிக அதிகமாகப் பாடப்பட்டன. இவற்றில் வடகரை தலங்கள் 63,
தென்கரை தலங்கள் 127.
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட சிவதலங்களில் பாடப்பட்ட ஒரே சிவதலம் புனவாயில். இத்தலம் பாடப்பட்ட காலத்தில் இவ்வூர் பாண்டிய நாடாக இருந்தது. புனவாயில் என்று பெயர்விளங்கிய இவ்வூர் இன்று திருபுனவாசல் என்று அழைக்கப்படுகிறது.
புனவாயில் பெயர்க்காரணம்
பாம்பாற்றுப் புனலும் வங்காள விரிகுடாவில் கடலின் கழிமுகப் புனலும் கலக்கும் வாயிலில் அமைந்த ஊர் என்பதால் இதற்கு புனல்வாயில் என்று பெயர். புனல் என்றால் நீர் என்று பொருள். ஊரில் திரு சேர்ந்து திருப்புனல்வாயில், திருபுனவாயில் என்றாகி பின்னாளில் அது திருப்புனவாசல் என்பதாக மருவியது.
இவ்வூரில் அமைந்துள்ள தலத்தின்மீது திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளார்கள்.
திருப்புனவாயில் இறைவனின் பெயர் பழம்பதிநாதர். இறைவி பெயர் கருணைநாயகி. இக்கோயில இரண்டாம் சுந்தர பாண்டியன் காலத்தில் சோழநாட்டு பாணியையும் பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ராஜகோபுரமும், விமானமும் அமைக்கப்பட்டது.
மூல கருவறையில் பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் "விருத்தபுரீஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறார். விருத்தம் என்றால் பழமை என்று பொருள். எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப் படுகிறார். சுந்தரர் இத்தலத்திற்கான தனது பதிகத்தில் இத்தலத்தை பழம்பதி என்று குறிப்பிடுகிறார். அதாவது பழைய ஊர்.
தேவாரப்பாடல்களின் வழியே ஊர்ப்பெயர்களையும் அந்த ஊர் ஐந்திணைகளில் எந்தத் திணையில் அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. குறிஞ்சி நில ஊர்கள் மலை, குன்றம்; முல்லை நில ஊர்களாக காடு, வனம், பாடி; மருத நில ஊர்களாக ஊர், ஆறு, துறை; நெய்தல் நில ஊர்களாக சுரம் பெயரால் அழைக்கப்படுகிறது.
மேலும் களர் நானிலத்திற்கும் பொதுவானதாகவும்
கடல், ஆறு, மலை முதலியவற்றின் எதிரே அமைந்த தலங்கள் வாயில் என்றும் வழங்கப்படுகின்றன.
நதிகள் கூடுமிடம் கூடல்.
சிவத்தலங்கள் பள்ளி என்றும் பாழி என்றும் பாடப்பட்டுள்ளன.
அந்த வகையில் புனல்வாயில் என்பது ஆறு கடலோடு சேரும் இடமாகும். இவ்வூருக்கும் அருகில் ஓடும் பாம்பாறு வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
தேவாரம் புனவாயில் பதிகத்திலிருந்து இவ்வூரின் நில அமைப்பை ஆய்வு செய்கையில் இவ்வூர் முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் நான்கு நிலங்களாக இருந்திருப்பது அறியமுடிகிறது.
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு செல்லும்பொழுது இவ்வூர் வழியே சென்றுள்ளார் என்பதை இவர் பாடிய பதிகங்களிலிருந்து அறியமுடிகிறது.
காந்தார பஞ்சமம் பண்ணில் பாடப்பட்ட பதிகம் இது.
இறைவன், இறைவி குறித்து பாடிய பொருளை ஒதுக்கி புனல்வாயில் ஊர் குறித்து திருஞானச்சம்பந்தர் எப்படி பாடியிருக்கிறார் என்று பார்ப்போம்.
முதல் பாடல்
முதல்பாடலில் திருப்புனவாயில் புன்னை மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில் என்கிறார். புன்னை என்பது மருதம் நிலத்து மரம். இதிலிருந்து இவ்வூர் வயல்வெளி நிலமாக இருந்திருப்பது அறியமுடிகிறது.
மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரிநூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
அன்னமன் னந்நடை யாளொ டும்ம ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.
இரண்டாவது பாடல்
தாழையும் புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும் தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த புனவாயில் என்கிறது. தாழை, புலிநகக்கொன்றை இரண்டும் நெய்தல் நில மரங்கள். இதன்மூலம் இவ்வூர் நெய்தல் நில ஊரென அறியமுடிகிறது.
விண்டர் தம்புர மூன்றெரித் துவிடை யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடம்
கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தனபுன வாயிலே.
மூன்றாவது பாடல்
கொன்றை பூவினாலான மாலை சூடியவன் என்கிறது. இதன்மூலம் இப்பகுதியில் கொன்றை மரங்கள் அதிகம் விளைந்திருப்பதன் மூலம் இந்நிலம் முல்லையாக இருந்திருக்கிறது அறியமுடிகிறது.
விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
புடைபட வாடிய வேடத் தானும்புன வாயிலில்
தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப்
படைவல னேந்திய பால்நெய்யா டும்பர மனன்றே
நான்காவது பாடல்
வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன் என்கிறது. இதன்மூலம் இவ்வூர் கடற்கரையொட்டியுள்ளது என்பதை இப்பதிகம் மூலம் அறியமுடிகிறது.
சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
அங்கையயி லங்குழ லேந்தினா னும்மழ காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலில்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே
ஐந்தாவது பாடல்
எருக்கும், ஊமத்தம் ஆகிய மலர்களை அணிந்தவன் என்கிறது. இவ்விரு தாவரங்கள் வறண்ட நிலப்பகுதியில் வளரக்கூடியவை. இதன்மூலம் புனவாயில் பாலை நிலமாகவும் இருந்திருப்பதை அறியமுடிகிறது. மேலும் பாம்பைச் சுற்றி புனவாயில் என்பதன் மூலம் சிவன் பாம்பைக் கழுத்தில் சுற்றியவன் என்றும் பாம்பாற்றினை அணிந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலித தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே
ஆறாவது பாடல்
கார்காலத்தில் மலர்கின்ற கொன்றை மலரையும் வெண்ணிறத் திங்களைச் சடையிலே சூடியவன் என்கிறது. கொன்றை மலர் மலரும் பருவத்தை இப்பதிகம் குறிப்பிடுகிறது.
வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப் போய்க்
காருறு கொன்றைவெண் டிங்களா னுங்கனல் வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலில்
சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.
ஏழாவது பாடல்
உமாதேவி சுடுகாட்டில் நடனம் புரிகிறவள். பகையசுரர்களின் புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன் என்கிறது. சுடுகாடும் அதில் நடனமும் என்பது பாலைத்திணைக்கு உரியது.
பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங்காட்டிடைத்
திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்பு மூன்றுமெய் துபுன வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர் இல்லையே.
எட்டாவது பதிகம்
கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல் காற்று வீசுகின்ற புனல்வாயில் என்கிறது.
மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தனபுன வாயிலே
ஒன்பதாவது பாடல்
கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற கரிசங்குகளும் சிப்பிகளும் நிறைந்த செல்வம் கொழிக்கும் புனல்வாயில். இதன்படி இவ்வூர் நெய்தல் நிலம்.
திருவளர் தாமரை மேவினா னும்திகழ் பாற்கடற்
கருநிற வண்ணனும் காண்பரி யகட வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல மல்கிய
பொருகடல் வெண்டிரை வெந்தெறி யும்புன வாயிலே
பத்தாவது பாடல்
புத்தர்களும் சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா. பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய திருப்புனவாயில் என்கிறது.
போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்
வேதனை நாடொறு மேத்துவா் மேல்வினை வீடுமே
பதினொன்றாவது பாடல்
இப்பதிகம் மூலம் இதைப் பாடியவன் சீகாழியில் அவதரித்த நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று அறிய முடிகிறது. குற்றமில்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பாடி இறையருள் பெறுமாறு வேண்டுகிறார் ஞானசம்பந்தர். இதன் மூலம் சீர்காழி என்று இன்று அழைக்கப்படும் ஊர் முன்பு சீகாழி என்று அழைக்கப்பட்டிருப்பதும் ஞானசம்பந்தன் தன் பெயரை நற்றமிழ் ஞானசம்பந்தன் என்றும் அழைத்துக்கொண்டதும் இந்தப் பதிகத்தின் மூலம் அறிய முடிகிறது.
பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள் சேர்வரே.
இப்பதிகம் வழியே திருஞானசம்பந்தர் சிவனுக்குப் பல்வேறு பெயர்களைச் சூட்டுகிறார். செஞ்சடை வானவன், வெண்பிறையன், விரிநூலினான், தோடுடையன், அழலேந்தியவன், நஞ்சுண்ட கண்டன் இப்பெயர்கள் யாவும் இன்றைய குழந்தைகளுக்குச் சூட்டத் தகுந்த பெயர்களாகும்.
இந்தப் பதிகம் காந்தார பஞ்சமம் பண்ணில் பாடப்பட்டது. காந்தாரி பஞ்சமம் என்பது காந்தாரி, ரக்தகாந்தாரி என்னும் பண் ராகங்களில் தோன்றுவது. நகை, மருட்கை, அவலம் எனும் சுவைகளோடு பொருந்தும் பண் இசை.
இந்தத் தலத்திலிருந்து "மூன்றுமுழமும் ஒருசுற்று; முப்பது முழமும் ஒருசுற்று" என்கிற பழமொழி பிறக்கிறது. இதன் பொருள்: இத்தலத்தின் சிவன் சிலைக்கு 3 முழம் ஆடையும் ஆவுடையாருக்கு 30 முழம் ஆடையும் அணியப்படுகிறது. இரண்டும் ஒன்றே என்கிறது மக்கள் சொலவம்.

.webp)
நமது திருப்புனவாசல் எவ்வளவு அழகாக பதியப்பட்டுள்ளது. பெருமையாகவுள்ளது. பாராட்டுகள். தொடர்க.
பதிலளிநீக்கு