புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -07

 @அண்டனூர் சுரா 


சிலப்பதிகாரம்,  வஞ்சிக்காண்டம், நடுகல் காதை

அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சி மூன்றிலும் அழும்பிலன்,  அழும்பில் குறித்து பாடிய அளவிற்கு இல்லாவிட்டாலும் சிலப்பதிகாரத்தில் அழும்பில் பாடப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் நடுகல் காதையில் சேரன் செங்குட்டுவனின் கையில் இடம்பெற்றிருக்கும் வேள் அழும்பில் வேளாக இருக்கிறது.

கனக விசயரை சிறை வைத்த சேரன் செங்குட்டுவன் அவனது அமைச்சர் வில்லவன் கோதையிடம், "கனக விசயரைச் சிறையிலிருந்து விடுவி. இனி தன் நாட்டாரும் பகை நாட்டாரும் இறைபொருள் செலுத்த வேண்டாம்" என்று தெரிவிக்கிறான். இச்செய்தியை அமைச்சர் வில்லவன் கோதை கையில் அழும்பில் வேள் கொண்டு மூதூர் தோறும் செய்தியாக அறிவித்து திரும்புகிறான்.

"நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே
தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை’ என்றே அழும்பில் வேள் உரைப்ப-"


இங்கு அழும்பில் வேள் என்பது புறநானூற்று பாடலில் வரும் அழும்பிலன் கையில் வைத்திருக்கும் வேள் என்றும்  அழும்பிலனை வீழ்த்திய பாண்டியனின் வேல் என்றும் பொருள் கொள்ளலாம்.

அகநானூறு, புறநானூறு,  மதுரைக் காஞ்சி மூன்று இலக்கியங்களிலும் அழும்பில் எனும் ஊர் பாடப்பட்டுள்ளது. இம்மூன்று பாடல்களையும் கொண்டு பார்க்கையில் அழும்பில் எனும் ஊர் அழும்பிலன் எனும் ஒரு குறுநில மன்னனின் பெயரால் அழும்பில் என்கிறாகிறது. அதாவது அழும்பிலன் ஊர் அழும்பில்.

பிறகு இந்த ஊரில் மானவிறள் வேள் எனும் குறுநில மன்னன் ஆட்சி செய்கிறான்.  இவன் பாண்டியன், சோழன் இரு அரசுகளின் சார்பற்று ஆட்சி செய்தவன். பிறகு இவன் பாண்டியனிடம் போரிட்டு தோல்வியுற்றான். பிறகு அழும்பில் ஊர் பாண்டிய நாடு ஆகிறது. அழும்பில் மீது சோழன் பெரும்பூட் சென்னி படையெடுக்க போரில் தோற்று மானவிறள் வேள் பாண்டிய நாட்டில் அடைக்கலம் புக அழும்பில் சோழ நாடாகிறது. அதன்பிறகு சோழ நாட்டின் கீழ் ஓர் ஊராக  அழும்பில்  திகழ்கிறது.

இதன்பிறகு இவ்வூர் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் சோழ நிலப்பகுதிகள் வளநாடுகளாக பிரிக்க ராஜராஜ சோழ வளநாடு என்றாகிறது. இதன் பிறகு பன்றியூர் நாட்டு அழும்பில் என்றாகிறது. அதன்பிறகே அழும்பில் கோவில் அழும்பிற்கோவில்  அம்புக்கோவில் என்றாகிறது.




விவாதம் -
இன்றைய அம்புக்கோவில்தான் அழும்பில் என்றும் இதை மறுக்கும் விவாதங்களும் தமிழறிஞர்களால் நிகழ்ந்துள்ளன. அந்த விவாதங்கள் என்ன சொல்கின்றன? இது குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06