புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 05
@அண்டனூர் சுரா
அகநானூறுஎட்டுத்தொகை நூல்களில் ஒன்று அகநானூறு. அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்கள் 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை நீண்ட வரிகளான பாடல்களைக் கொண்டிருப்பதால் இதற்கு நெடுந்தொகை என்கிற பெயரும் உண்டு. முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிரை என்றும் அடுத்த 300 பாடல்கள் மணிமிடைப் பவளம் என்றும் அடுத்த 400 பாடல்க் நித்திலக் கோவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அகநானூறு 44 ஆவது பாடலில் புதுக்கோட்டை கரம்பக்குடிக்கும் அருகிலுள்ள அழும்பில் எனும் ஊர் பாடப்பட்டுள்ளது.
இப்பாடலை பாடியவர் குடவாயில் கீரத்தனார் எனும் புலவராவார். முல்லை திணை பாடல் இது.
போருக்குச் சென்ற தலைவன் அப்போர் முடிந்ததும் தன் தலைவியின் நினைவு மேலெழத் தன் தேர்ப்பாகனிடம் தேரை விரைந்து செலுத்துமாறு தூண்டுகிறான்.
வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தந்திறை கொடுத்துத் தமரா யியினரே
முரண்செறிந் திருந்த தானை யிரண்டு
மொன்றென அறைந்தன பணையே நின்டேர்
முன்னியங் கூர்தி பின்னிலை யீயாது
வூர்க பாக வொருவினை கழிய
நன்ன னேற்றை நறும்பூ ணத்தி
துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி
பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாஆங்
கன்றவர் குழீஇய வளப்பருங் கட்டூர்ப்
பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக்
கண்டது நோனா னாகித் திண்டேர்க்
கணைய னகப்படக் கழுமலந் தந்த
பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி
யழும்பி லன்ன வறாஅ யாணர்ப்
பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவைப்
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளைத்
தண்குட வாயி லன்னோள்
பண்புடை யாகத் தின்றுயில் பெறவே!
இப்பாடலின் பாட்டுத்தலைவன் பெரும்பூட்சென்னி எனும் சோழன். இவனது அழும்பில் எனும் ஊர் நீங்காத புது வருவாயைக் கொண்டும் மிகுந்த பழைய நெல்லினைக் கொண்டு பல குடியிருப்பைக் கொண்டிருக்கிறது. இத்தகையச் சிறப்புகளைக் கொண்டவன் பெரும்பூட்சென்னியின் தலைவி என்பது இப்பாடல் தரும் பொருள்.
அழும்பில் மையமாகக் கொண்ட இப்பகுதி ஊர்கள் அழும்பில் நாடு என்றும் பிறகு அது அம்புநாடு என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூரில் பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்தில் வீர ராஜேந்திர சோழீஸ்வரமுடையார் கோவில் என்று இக்கோவில் அழைக்கப்படுவதால் இக்கோவில் வீர ராஜேந்திர சோழ மன்னர் ஆட்சிக்காலமான பொ.ஆ 1106 – 1069 காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோவிலின் சிவன் பக்தலலிதேஸ்வரர் என்றும் தாயார் தயாபுரநாயகி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலையொட்டி வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது.
அழும்பில் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு விறல்வேள் எனும் குறுநில மன்னன் ஆண்டுவந்தான். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியயன் நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனை எதிர்த்து போர்புரிந்து தன் நாட்டினை இழந்தான். இந்நிலம் நெடுஞ்செழியன் கைக்குச் சென்றது. பிறகு இந்நிலம் பாண்டிய மன்னரிடமிருந்து பெரும்பூண் சென்னி எனும் சோழவேந்தன் கைக்குச் சென்று சோழ வேந்தனின் வளமையான ஊர்களில் ஒன்றானது.
ராஜராஜவள்நாட்டு பன்றியூர் அழும்பில் என்று அழைக்கப்பட்ட இந்நிலத்தில் சிவன் ஆலயம் எழுப்பிய பிறகு அழும்பில் கோவில் என்றாகி பிறகு அது அழும்பிற்கோவில் - அம்புக்கோவில் என்பதாக மருவியது.

கருத்துகள்
கருத்துரையிடுக