புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் – 04
@அண்டனூர் சுரா
புதுக்கோட்டை கரம்பக்குடிக்கும் அருகில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு பன்றியூர்நாட்டு அழும்பில் என்று குறிப்பிடுகிறது. இந்த அழும்பில் சங்கப் பாடல்களிலும் பிற்கால கல்வெட்டுகளிலும் இடம்பெற்றுள்ளது.
உரையாசிரியர் பொ.வே.சோமச்சுந்தரனார் அவர்கள் புதுக்கோட்டை பகுதியிலுள்ள அம்புக்கோவில் என்று வழங்கப்படும் ஊரே அழும்பில் என்று அவரது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஊரும் பேரும் எனும் நூலில் ரா.பி. சேதுப்பிள்ளை “புதுக்கோட்டை நாட்டிலுள்ள அழும்பில் என்னும் ஊர் அம்புக்கோயில்” என்று குறிப்பிடுகிறார்.
அழும்பில் குறித்து நான்கு இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதிலொன்று, புறநானூறு.
புறநானூறு
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த சங்கப் பாடல்களாகும். இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும். இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடிகள் வரையிலான வரிகளைக் கொண்டுள்ளது.
புறநானூறு 283 ஆவது பாடல் அழும்பிலன் குறித்து பாடுகிறது. புலவர் அண்டர்நடுங்கல்லினார் எனும் புலவரால் இப்பாடல் பாடப்பட்டது. தும்பைத் திணை வகைப் பாடல் இது. இப்பாடலின் பாட்டுடைத் தலைவன் அழும்பிலன். இவன் போரில் இறந்துவிடுகிறான். மாய்ந்த வள்ளலை நினைந்து பாணர் வருந்திப் பாடியதைப் போல அமையப் பெற்ற இப்பாடலில் உவமையாக நீர்நாய், முதலை, வரால் மீன், வாளை மீன் இடம்பெறுகின்றன.
நீர்நாயும் முதலையும் சண்டைப்போடுவதைப் போல அழும்பிலன் தன் நண்பனுக்காக எதிரியிடம் சண்டையிடுகிறான். நீர்நாய் வாளை மீனைச் சாப்பிட்டு வரால் மீனுக்கு காத்திருக்கிறது. நீர்நாயை வேட்டையாட அந்த நீர் நிலையிலிருந்து முதலை வருகிறது. நீர்நாய், முதலைக்குமிடையே சண்டை நடக்கிறது. இருவரில் யார் தோற்று இறந்தாலும் அவர்களுக்காக இன்னொருவர் வருவார் என்பதே இப்பாடல் சொல்லும் செய்தி. அதாவது நீர் நாயை முதலை வீழ்த்திவிட்டால் முதலையோடு சண்டையிட அடுத்த நீர்நாய் வரும். முதலை தோற்றுவிட்டால் அடுத்த முதலை வரும். இங்கு அழும்பிலன் நீர்நாயோடு ஒப்பிடுவதன்மூலம் பலம் பொருந்திய முதலையொத்த எதிரியிடம் போர் புரிந்திருக்கிறான் என்று அறியமுடிகிறது. தன் நண்பன் மீது பாயவரும் வேல்களை அழும்பிலன் தன் நெஞ்சினில் வாங்கி நண்பனைக் காக்கிறான். அந்த வேல் எப்படியிருக்கிறயென்றால் வண்டிச் சக்கரக் குடத்தின் ஆரக்கால்கள்போல இருக்கிறது. இவனைப் புறநானூறு 'அழும்பிலன் அடங்கான் தகை' என்கிறது. இவன் கோசர் குடியைச் சேர்ந்தவன்.
அழும்பிலன் நண்பனுக்காக உடலைக்கொடுத்து உயிரையும் கொடுத்தவன். ஆகவே இவனது பெயரால் இவ்வூர் அழும்பில் என்று பெயர் பெற்றதாக உரையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.. இப்பாடலில் அழும்பிலனின் நண்பன் யார் என்பதோ, யாரை எதிர்த்து போர்ப் புரிந்தான் என்பதோ குறிப்பிடப்படவில்லை.
இதோ அந்தப் பாடல்.
ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட…… னே பாங்கற்கு
ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
மென்தோள் மகளிர் நன்று புரப்ப
…… ண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே.
இப்பாடலை இயற்றியவர் அண்டர்நடுங்கல்லினார். அண்டர் என்ற சொல்லுக்கு ஆயர் (இடையர்) என்று பொருள். ஒருகால், ஓரூரில் ஆநிரைகளை மீட்பதற்காகப் போரிட்ட வீரன் ஒருவன் இறந்து அவனை ஆயர்கள் நடுகல் நாட்டிச் சிறப்பிக்க, அதைப் புகழ்ந்து பாடியதால் இப்புலவர் அண்டர் நடுங்கல்லினார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
அண்டனூர் பெயர்க்காரணம்
அண்டனூர் எனும் ஊரின் பெயர்க்காரணம் இதிலிருந்தே பிறக்கிறது. அண்டனூரில் இடையர்கள் அதிகம். அண்டர், அண்டன் என்றால் இடையர் என்று பொருள். இதிலிருந்தே அண்டன்+ ஊர் = அண்டனூர் என்கிற ஊர்ப்பெயர் கிடைக்கிறது.
அண்டர்நடுங்கல்லினார் பாடிய அழும்பில் (அம்புக்கோவில்) அண்டனூருக்கும் மிக அருகில் உள்ள ஓர் ஊராகும்.
இந்தப் பாடலோடு தொடர்புடைய ஒரு பாடல் வேறொரு சங்கப் பாடலில் உள்ளது. இந்தப் பாடல் குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.
.jpeg)
நன்றாய் இருக்கிறது. அப்படியே கரம்பக்குடி பற்றிய இலக்கியச்செய்தி, பெயர் காரணம் பற்றி தயவு செய்து தெரிவிக்கவும்.
பதிலளிநீக்கு