புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 03

@அண்டனூர் சுரா


பொன்னியின் செல்வன் , காவிரி மைந்தன்

கல்கியின் பொன்னியின் செல்வன், காவிரி மைந்தன் இரு நாவல்களிலும் கொடும்பாளூர் இடம்பெறுகிறது. அருள்மொழிவர்மனின் மனைவியாக வரும் வானதி கொடும்பாளூரைச் சார்ந்தவர்.

கொடும்பை எனும் கொடும்பாளூர் சங்கக் கால காப்பியம் அதற்குப் பிறகான புராணம் இரண்டிலும் தவிர்க்க முடியாத ஊராக இடம்பெறுகிறது.

"அரியும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் உறைபடக் கடந்தவிந்
நெடும்பேர் அத்த நீந்திச் சென்று
கொடும்பை நெடுங்குளம் கோட்டகம் புக்கால்"

என்கிறது சிலப்பதிகாரம். இன்றைய திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்குச் செல்லும் பாதையில் கொடும்பாளூருக்கும் அருகில் பாறை நிறைந்துள்ள பாதையையும் கானல் நீரும் ஏரியும் ஆக்கிரமிப்புகளையும் மீறி காணக்கிடக்கின்றன. உண்மையில் இப்பாதை தமிழகத்தின் இரு பெருநகரங்களை இணைக்கும் பழைய பாதைகளில் ஒன்றாகும். சிலப்பதிகாரம் காலத்தில் அதாவது பொ.ஆ இரண்டாம் நூற்றாண்டில் பாண்டிய தலைநகர் மதுரைக்கும் சோழர் தலைநகரம் உறையூருக்கும் இடைப்பட்ட ஊராக கொடும்பாளூரும் இவ்விரு நகரங்களை இணைக்கும் பாதையாக இந்த வழித்தடம் இருந்திருக்கிறது.

இதையே பெரியபுராணம்

"முருகுறுசெங் கமலமது மலர்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண்டீரைவாவிப் பயில்பெடையோ டிரையருந்தி
வருகுறுதண் டுளிவாடை மறையமா தவிச்சூழல்
குருகுறங்குங் கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர்"

என்கிறது.

இதைக்கொண்டு பார்க்கையில் கோனாட்டின் தலைநகராக கொடும்பாளூர்  விளங்கியிருக்கிறது.  இந்த ஊரின் அடையொழியாக கொடிநகரம் என்று இடம்பெறுவதால் இரு நாடுகளின் நுழைவு வாயிலாக கொடும்பாளூர் திகழ்ந்திருப்பது இதன்மூலம் அறியமுடிகிறது.

கொடிநகரம் என்று இலக்கியத்தால் சுட்டப்படும் ஒரே நகரம் கொடும்பாளூர்தான்.  மதுரையும் கொடிநகரம்தான்.  ஆனால் சங்கப் பாடல், காப்பியங்களில் வெளிப்படையாக இது குறிக்கப்படவில்லை . கோவலன் கண்ணகி இருவரும் மதுரை நகருக்குள் நுழைகிறார்கள்.  மதுரை நகரில் கோவலன் இறந்துவிடுவான் என்பதை முன்கூட்டிய அறிந்த மதில்கொடி மதுரை நகருக்குள் வர வேண்டாம் என்று மறித்து கைக்காட்டுவதைப் போல இளங்கோ சிலப்பதிகாரத்தில் வடித்திருப்பார்.

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

இந்த வரியில் மூலம் மதுரை நகரமும் கொடிநகரமே.  ஆயினும் கொடிநகரம் என்கிற பெயரால் மதுரை அழைக்கப்படவில்லை. அந்த வகையில் கொடும்பை எனும் கொடும்பாளூர் கொடிநகரம் என்கிற சிறப்பைப் பெறுகிறது.

கொடும்பாளூர் பெயர்க்காரணம்

கொடும்பை என்றால் குளம், ஏரி, தூம்பு என்று பொருள். அப்படியென்றால் சுற்றிலும் காடும் பாலையும் வறட்சியும் கொண்ட நிலப்பகுதிக்கு மத்தியில் ஏரி குளம் கொண்ட பகுதியாக கொடும்பை இருந்திருக்கிறது.  கொடும்பை+ஊர் = கொடும்பையூர் என்று திரிந்திருக்கவேண்டிய ஊர் இது. ஆனால் கொடும்பாளூர் என்று திரிந்திருக்கிறது. அப்படியென்றால் வேளிர் மன்னர்கள் இந்தப் பகுதியை ஆண்டிருக்கிறார்கள்.  இதிலிருந்தே கொடும்பை +வேளிர்+ஊர் = கொடும்பாளூர் என்றாகியிருக்கிறது. கல்வெட்டுகளின் குறிப்புப்படி இருக்கு வேளிர் இப்பகுதியை ஆண்டிருக்கிறார்கள்.

முச்சுகுந்தேசுவரர் கோவிலுள்ள ஒரு கல்வெட்டு மூலம் இப்பகுதியை ஆண்டவர்கள் இருக்குவேளிர் வம்சா வழி என்று அறியமுடிகிறது. இவர் எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய குலத்தைச் சேர்ந்த மாறவர்மன் இராசசிம்மன் சேனைக்கும் பல்லவ நந்திவர்மன் படைக்கும் கொடும்பாளூரில் கடும்போர் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பற்றிய குறிப்பு பெரும்பிடுகு சுவரன் மாறன் எனும் முத்தரையரால் குறிக்கப்பெற்ற கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

பொ.ஆ 840 -909  இடைப்பட்ட காலத்தில் இப்பகுதியை ஆண்ட மாறவன் பூதி என்கிற தென்னவன் பாண்டிய மன்னனுக்கு விரோதமாக செயல்பட்டான். இவனுக்கு சோழன் ஆதித்தன் நட்பு கிடைத்தது. இதன்மூலம் தொண்டை மண்டலத்தை வென்றான். இந்த நட்பின் விளைவாக இருக்கு வேளிர் மரபினருக்கும் சோழ மரபினருக்கும் மணக்கலப்பு நடந்திருக்கிறது.

பின்வந்த இருக்கு வேளிர் மன்னன் பொ.ஆ 909 -959 பராந்தகன் ஆவான். இவனுக்கு 'மகிமாலய இருக்குவேள் சமராபிராமன்' என்கிற பட்டப்பெயர் உண்டு. இவன் பொ.ஆ 940 இல் ஈழத்திற்கு அனுப்பப்பட்ட சோழப்படைக்குத் தலைமை தாங்கினான். இவனது மகன் ஆதித்தியன் பூதி விக்கிரமகேசரி ஆவான். இவன் மதுராந்தகன் இருக்குவேள் என பட்டப்பெயரால் அழைக்கப்பட்டான். இவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் பராந்தகன், இளையமகன் ஆதித்யவர்மன்.

பராந்தகன் சோழப்படைக்குத் தலைமை தாங்கி ஈழத்திலேயே வீரமரணம் அடைந்தான்.  இளையமகன் ஆதித்யவர்மன் இராசராச சோழன் காலத்தவன். இவன் சோழனோடு வட நாடு படையெடுத்துச் சென்று சாளுக்கியருடன் போர்தொடுத்து வெற்றி பெற்றான். இவனது இரத்த உறவைச் சேர்ந்தவள்தான் அருண்மொழிவர்மனின் (ராஜராஜசோழனின்) மனைவி வானதி.

மாறவன் பூதியால் கட்டப்பட்ட திருப்பூதிசுவரம் என்னும் ஆலயம் இப்பொழுது காணப்படவில்லை.  முச்சுகுந்தேசுவரம் என்ற ஆலயம் வீர சோழன் பராந்தகனால் கட்டப்பட்டது. கொடும்பாளூரில் பெயர் கொண்டிருக்கும் மூவர் கோவில் ஆதித்தியன் பூதி விக்கிரமன் கட்டிய கோவிலாகும்.

கொடும்பாளூர் கோயில்களை கால வரிசையாகப் பார்ப்போம்.

ஐந்தளி

எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கட்டப்பட்ட ஐந்தளி என்ற ஆலயத்தின் அடிப்பாகம் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரே பீடத்தில் ஐந்து கர்ப்பக்கிரகங்கள் அமைந்திருப் பதால் ஐந்தளி என்ற பெயர் பெற்றது. இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகள் மகாபலிபுரம், திருத்தணி, காஞ்சி முதலிய இடங்களிலுள்ள பல்லவ சிற்ப வேலைப்பாடுகளையே ஒத்திருக்கின்றன. இங்குள்ள சிங்கத் தூண்களில் சிலவற்றை விராலிமலையில் ஒரு மண்டபத்தில் இன்றும் காணலாம்.

முச்சுகுந்தீசுவரம்

முச்சுகுந்தீசுவரம் என்ற ஆலயம் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதாகும். பல்லவர்கால சிற்ப இலக்கணங்களே சோழர் காலத்திலும் மேற்கொள்ளப்பெற்று வந்ததோடு பின்னர் இவ்விருவருடைய சிற்ப வேலைப்பாடுகள் கலப்புற்று விளங்குவதாயிற்று. இத்தகைய சிற்ப இலக்கணக்கலப்பை இங்கு காணலாம்.

மூவர் கோவில்

மூவர் கோயில்தான் இவ்வூருக்கும் தமிழ்நாட்டிற்கும் அடையாளமாகத் விளங்குகின்றது. இங்கு நடுவில் மூன்று கற்பக் கிரகங்களும், சுற்றுப் பிரகாரத்தில் 15 ஆலயங்களும் இருந்தன. இம்மூன்று கர்பக்கிரகங்களும் பூதி விக்கிரமகேசரி, தன் பெயரால் ஒன்றினையும், ஏனையவற்றைத் தன் மனைவியர்,கற்றலி,வரகுணை என்ற இருவர் பெயராலும் அமைத்தான்.

இக்கோயிலின் கல்வெட்டிலிருந்து, இவ்விடத்து காளமுக சைவ மரபினர் மடம் ஒன்று இருந்ததாகத் தெரிகின்றது. இம் மூவர் கோயிலின் விமானத்தைக் கருத்திற்கொண்டுதான் இராசராசன் தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயத்தை அமைத்தான் என்று நம்பப்படுகிறது. பிற்காலச் சோழர்களின் திருப்பணிகள் யாவும் இம்மூவர் கோயிலையே ஆதாரமாகக் கொண்டன.

இங்கு சுமார் 108 சிவாலயங்கள் இருந்தன என்பதாக நம்பப்படுகின்றது. எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்களும் நந்திகளும் காணக்கடக்கின்றன. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்  நந்தியைப் போல ஒரு நந்தி இங்கு தோண்டி எடுக்கப்பட்டிருப்பதே ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்,  திருபராந்தகன், திருபுரசுந்தரி, அசுரன் ஆகிய மூவர் கொண்ட ஒரு கூட்டச் சிற்பங்கள் துர்க்கை, விஷ்ணு, மோகினி, வலம்புரி, கணேசன் முதலியவை விமானங்களில் காணப்படும் தட்சினாமூர்த்தி, உமாசகாயமூர்த்தி, காலாரிமூர்த்தி போன்ற மூர்த்தங்கள் இவைகளைக் காணுந்தோறும் நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்வதோடு வியப்பை அளிக்கவல்லது. இவ்வூரைச் சுற்றிலும் கோட்டை மதிற்சுவர்கள் காணப்படுகின்றன. தொல்லியல் துறையினர் இவ்வூரில் பல கல்வெட்டுகள் நந்தி, சிற்பங்கள் கண்டறிந்துள்ளனர்.

இருக்குவேளிர் என்பவர்கள் யார்? அவர்களின் பூர்வீகம் என்ன? அடுத்து எழுதுகிறேன்.

இக்கட்டுரை 1
947 ஆம் ஆண்டு கே. ஆர். வெங்கடராம அய்யர் எழுதிய கொடும்பை எனும் கொடும்பாளூர் கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டது.




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06