புதுக்கோட்டை பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-02
@அண்டனூர் சுரா
பெரியபுராணம்
பெரியர் புராணம் என்பது பெரிய புராணம் என வழங்கப்படுகிறது. இந்தப் புராணத்தை இயற்றியவர் சேக்கிழார் பெருமகனார். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர். தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். இவர் இப்புபுராணத்திற்குச் சூட்டியப் பெயர் திருத்தொண்டர் புராணம்.
பன்னிரண்டாம் திருமறை என்று இந்தப் புராணம் அழைக்கப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடும் பெரியபுராணம் 2 கண்டங்கள் 13 சருக்கங்கள் 4250 பாடல்கள் என மூன்று விருத்தங்களால் மொத்தப் பாடல்களையும் பாடியுள்ளார்.
.
சோழ நாட்டை ஆண்ட குலோத்துங்க சோழன் இவருக்கு உத்தமச் சோழப் பல்லவன் எனப் பட்டம் சூட்டி தனது அரசவையில் முதலமைச்சராக ஆக்கிக்கொண்டார்.
ஒருமுறை இரண்டாம் குலோத்துங்க சோழன் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியை வாசித்தவர் அதிலிருக்கும் சாராம்சங்களை வியந்து சேக்கிழாரிடம் பகிர்ந்துகொண்டார். இதை ஏற்றுக்கொள்ளாத சேக்கிழார் மன்னரிடம், “சீவகசிந்தாமணி இம்மைக்கும் மறுமைக்கும் ஆகாத பொய்க்கதை. அதனைப் படிப்பதால் என்ன பயன், வீண்” என்றார்.
இதைக்கேட்ட மன்னர், “அப்படியானால் உண்மையான கதை எது? அதை நீ இயற்றே” என்று கேட்டார். சேக்கிழார் தில்லைநகர் நடராசரை மனதிற்குள் வணங்க நடராஜர், “உலகெலாம்” என்கிற சொல்லை எடுத்துக்கொடுத்தார். அச்சொல்லை முதற்சொல்லாகக் கொண்டு சேக்கிழார் முழு திருத்தொண்டத்தொகையையும் இயற்றினார்.
இப்புராணத்தை இயற்றி முடித்ததும் மன்னர் சேக்கிழாரையும் திருத்தொண்டப் புராணத்தையும் யானைமேல் ஏற்றித் தானும் ஏறி இரண்டு கைகளினால் சேக்கிழாருக்கு சாமரம் வீசி “இதுவன்றோ! நான்செய்த தவப்பயன்” என்று மகிழ்ந்தான் சோழன்.
பெரியபுராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் கதைகளைக் கொண்டது. அந்த அறுபத்து மூன்று நாயன்யார்களில் இடங்கழி நாயனார் ஒருவர். இவர் சோழநாடு கோனாடு எல்லைக்குட்பட்ட கொடும்பாளூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர். இடங்கழி நாயனார் புராணம் தலைப்பின் கீழ் கொடும்பாளூர் இவ்வாறாக பாடப்பட்டுள்ளது.
எழுந்திரைமா கடலாடை இருநிலமா மகள்மார்பில்
அழுந்துபட எழுதும்இலைத் தொழில்தொய்யில் அணியினவாம்
செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின்
கொழுந்துணர்கோ திக்கொண்டு குயில்நாடு கோனாடு
முருகுறுசெங் கமலமது மலர்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண்டீரைவாவிப் பயில்பெடையோ டிரையருந்தி
வருகுறுதண் டுளிவாடை மறையமா தவிச்சூழல்
குருகுறங்குங் கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர்
அந்நகரத் தினிலிருக்கும் வேளிரகுலத் தரசளித்து
மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்ல் பாக்கொங்கின்
பன்னுதுலைப் பசும்பொன்னாற் பயில்பிழம்பாம் மிசையணிந்த
பொன்னெடுந்தோன் ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்
இடங்கழியார் எனவுலகில் ஏறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தார் அடித்தொண்டின் நெறியன்றி
முடங்குநெறி கனவினிலும் முன்னாதார் எந்நாளும்
தொடர்ந்த பெருங்காதலினால் தொண்டர்வேண் டியசெய்வார்.
இடங்கழி நாயனார் குறித்த புராணக் கதை
சோழவளநாட்டின் குறு நாடான கோனாட்டில் கொடும்பாளூர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊரைத் தலைநகராகக் கொண்டு குறுநில மன்னர் இடங்கழியார் ஆட்சி செய்தார். வேளிர் குலத்தில் பிறந்த இவர், இயல்பிலேயே சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார். இவர் காலத்தில் நாடெங்கும் சைவம் தழைத்தோங்கியது,
ஒரு சிவனடியார் தினந்தோறும் சிவனை வழிபட்டு சிவன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார். அவருக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. சிவனடியாருக்கு ஒரு முறை அன்னதானம் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. அவருடைய களஞ்சியத்தில் போதுமான அளவிற்கு நெல் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தவர் அரண்மனை களஞ்சியத்தில் நெல் இருப்பதை தெரிந்துக்கொண்டார்.
ஒரு நாள் நள்ளிரவு வேளையில் அரண்மனைக்குள் நுழைந்து நெல் களஞ்சியத்திலிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார், இந்த தொழிலில் அனுபவமின்மையால் அரண்மனை காவலரிடம் மாட்டிக்கொண்டார். அடியாரைக் கைது செய்து, காவலர்கள் இடங்கழியார் முன் நிறுத்தினார்கள்.
காவலர் வாயிலாக விவரத்தைக் கேட்ட இடங்கழியார் சிவனடியாரிடம், “நீர் ஏன் இச்செயலை செய்தாய்?” என்று கேட்டார். இதற்கு அடியார், “நான் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தேன். தற்போது வழங்க நெல் இல்லாததால் அரண்மனை களஞ்சியத்திலிருந்து இந்த நெல்லை எடுத்தேன். என் செயலுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார் சிவனடியார்.
இதைக் கேட்ட இடங்கழியார் அவரை பணிந்து தொழுதார். அவருக்கு களஞ்சியத்திலிருந்து ஏராளமான பொன்னையும் பொருளையும் கொடுத்தும் மனம் நிறையாத மன்னன், அன்னதானம் வழங்க தேவையான நெல்லையும் தானியங்களையும் தாராளமாய் கொடுத்து அனுப்பினார்.
இடங்கழியாரின் பரந்த மனதை உணர்ந்து, அவருக்கு திருக்காட்சி தந்து அருளினார் சிவபெருமான் என்கிறது இடங்கழியார் புராணக் கதை.
இப்புராணக் கதையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை ஒன்றியத்தின்கீழ் ஓர் ஊராட்சியாக இருக்கும் கொடும்பாளூர் 'கோனாட்டு கொடிநகரம் கொடும்பாளூர்' என்று பாடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் மதுரை மாநகரை கொடிநகரம் என்கிறது. பெரியபுராணம் கொடும்பாளூரைக் கோனாட்டு கொடிநகரம் என்கிறது. இதிலிருந்து சோழர்கால ஆட்சியில் கானாடு கோனாடு எனும் இருபெரும் நாடுகளில் கோனாட்டின் தலைநகராக கொடும்பாளூர் இருந்திருப்பது இதன்மூலம் தெரியவருகிறது.
கொடும்பாளூர் குறித்து 1947 ஆம் ஆண்டுவாக்கில் பிரபலமான ஆய்வாளர் ஒருவர் எழுதிய குறிப்பு என்ன சொல்கிறது என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்,,,


கருத்துகள்
கருத்துரையிடுக