புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

 @அண்டனூர் சுரா

 
சிலப்பதிகாரம்

ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதல் காப்பியம் இதுவாகும். இந்நூல் ‘பாட்டிடையிட்ட தொடர்நிலை செய்யுள்’ என்று வழங்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழைப் பாடும் காப்பியமாகும். இக்காப்பியம் இயற்றப்பட்ட காலம் பொ.ஆ இரண்டாம் நூற்றாண்டு. இக்காப்பியத்தை இயற்றியவர் இளங்கோ அடிகள். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.





 கொடும்பை

இக்காப்பியத்தில் கொடும்பை எனும் ஊர் இடம் பெறுகிறது.  இவ்வூர் புகார் நகரத்திலிருந்து மதுரை நகருக்குச் செல்லும் வழியில் குறுக்கிடுகிறது. கொடும்பை என்பதற்கு நீர், குன்றம், குளம்,  தூம்பு, தாம்பு என்கிறது யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் லெக்சிகன். காப்பியத்தில் இடம்பெறும் கொடும்பை எனும் ஊர் இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட ஊராகும். இவ்வூர் சிலப்பதிகாரத்தில் ‘கொடும்பை நெடுங்குளக்கோட்டகம்’ என்கிற பெயரில் இடம்பெற்றுள்ளது. இவ்வூர் இன்று கொடும்பாளூர் என்று மருவி வழங்கப்படுகிறது. கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் புகார் நகரத்திலிருந்து உறையூர் வழியாக தென்திசை நோக்கி செல்கிறார்கள். அப்போது மாங்காட்டு மறையோனைச் சந்தித்து மதுரைக்குச் செல்லும் வழியைக் கேட்கிறார்கள். மறையோன் மூன்று வழிகள் சொல்கிறான். அவன் சொல்லும் வழியில் கொடும்பை எனும் ஊர் இடம்பெறுகிறது.
 


கோட்டகம்



கொடும்பை எனும் ஊர் நெடுங்குளமும் கோட்டகமும் கொண்ட நிலஅமைப்பைக் கொண்டிருக்கிறது. கோட்டகம் என்பதற்கு நீண்ட ஏரி அல்லது நீண்ட குளம் என்று பொருள். கோட்டகம் எனும் பெயரில் கந்தர்வகோட்டையில் இரண்டு ஊர்கள் பெயர் விளங்குகின்றன. ஒன்று கந்தர்வகோட்டைக்கும் அருகிலுள்ள கொத்தகம். மற்றொன்று கல்லாக்கோட்டைக்கும் அருகிலுள்ள கொத்தகப்பட்டி. இவ்விரு ஊர்களும் நீண்ட ஏரிக்கரையில் அமையப்பெற்றுள்ள ஊர்களாகும். கோட்டகம் என்பதுதான் கொத்தகம் என்பதாக மருவியிருக்கிறது என்பது இச்சொல் தொடர்பான தற்கால செய்தியாகும்.

சிலப்பதிகாரம் பாடிய கொடும்பை

“அறையும் பொறையும் ஆர்இடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தவிந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று,
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்“
 
இந்த வரிகள் சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகாண் காதையில் இடம்பெறுகிறது.  கொடும்பை எனும் கொடும்பாளூருக்கும் அருகில் மதுரைக்குச் செல்ல சூலம் போன்று மூன்று வழிகள் உள்ளன. இவை மூன்றும் வேறுபட்ட பாதைகளைக் கொண்டது என்கிறது இப்பாடல்.
 
வலது பாதை

வலதுபுற வழியில் சென்றால் என்னென்ன மரங்கள், தாவரங்களைக் காணலாமென இளங்கோவடிகள் பட்டியலிட்டுள்ளார்.

வெண்கடம்பு (விரிந்த தலையினையுடைய வெண்கடம்பு)
ஓமம் (காய்ந்த தலையினையுடைய ஓமை)
உழிஞ்சில் ( பொரி அரை உழிஞ்சில்)
முளிமூங்கில் (புல்முளி மூங்கில்)
வாகை
மூங்கில் (தண்டு காய்ந்த புல்லாகிய மூங்கில்)
வாழை
கமுகு
மா
பலா
மரல் கள்ளி
தெங்கு
கரும்பு
நெற்பயிர்
தினை
வரகு
மஞ்சள்
கவலை

இளங்கோவடிகள் குறிப்பிடும் இம்மரங்கள் மதுரை நகருக்கும் புறத்தில் வளர்ந்திருந்த காட்டு மரங்களாகும்.

இக்காட்டின் தொடர்ச்சி கொடும்பை மற்றும் அதற்கு வடகிழக்கு வரை பரந்திருந்தது என்கிறார்கள் சிலப்பதிகார உரையாளர்கள்.

புதுக்கோட்டையின் பழைய பெயர்
 
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நார்த்தாமலையின் பழைய பெயர் கடம்பவனம். பிறகு இவ்வூர் ஜெம்புகேசுவரம் கடம்பவனம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. காரணம் இவ்வூரைச் சுற்றிலும் கடம்ப மரங்கள் அதிகம் விளைந்திருந்தன. இக்காலத்தையொட்டி புதுக்கோட்டை நிலப்பகுதி  காடாரம்பம் என்று அழைக்கப்பட்டது.
 
இடது பாதை
 
சிலப்பதிகாரம் குறிப்பிடும் மூன்று பாதைகளில் ஒன்றான இடது வழியில் சென்றால் சிறகினையுடைய வண்டினம் செவ்வழிப்பண் முரல்கின்ற ஆழமான குளங்களும் வயல்களும் குளிர்ந்த சோலைகளும் விளங்கும் மருத நிலப்பகுதியும், அதன்பின் அருஞ்சுரங்கள் பலவும் இடையிடையே கிடக்கும் காட்டு வழியினையும் கடந்து சென்றால் திருமாலிருங்குன்றத்தினைச் சென்று சேர்வீர் என்கிறார் இளங்கோ. இவர் குறிப்பிடும் திருமாலிருங்குன்றம்  எனும் ஊர் தற்போது அழகர்மலை என்று பெயர்விளங்குகிறது.


நடுபாதை

நடுவழியானது செம்மையான வழியாகும். தேனொழுகும் மலர்ச்சோலைகள் சூழ்ந்த ஊர்கள் இடையிடையே வரும். காட்டினை கடந்தால் பெருந்துயர் தரும் கானுறை தெய்வம் ஒன்று எதிர்படும் என்கிறார்.


புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட ஊர்களில் பழைமையும் தொன்மையும் கொண்ட ஊர்களில் ஒன்றாக கொடும்பை எனும் கொடும்பாளூர் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தால் பாடப்பட்ட இவ்வூரை மற்றொரு காப்பியமும் பாடியுள்ளது. அது என்ன காப்பியம்?  யோசித்து வையுங்கள்!

(இப்பதிவு திருத்தத்திற்கு உட்பட்டது)
@அண்டனூர் சுரா ஆகஸ்ட் 15, 2025

புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி அக்டோபர் 3- 12, 2025
 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06