புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -11
@அண்டனூர் சுரா
கலிங்கத்துப்பரணிசிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான பரணி இலக்கியம், போர்க்களக் காட்சியையும் போரில் வெற்றி பெற்ற வீரரின் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் தன்மையில் பாடப்பட்ட இலக்கியம்.
"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி"
எனப் பரணி இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகிறது 'இலக்கண விளக்கம்' என்னும் நூல். பரணி நூல்களில் முதன்மையானது கலிங்கத்துப்பரணியாகும்.
இந்த இலக்கியம் செயங்கொண்டார் புலவரால் பாடப்பட்டது. கி.பி 12-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் அவை புலவராக இருந்த செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியைப் பாடியதால் 'பரணிக்கோர் செயங்கொண்டார்' என அழைக்கப்படுகிறார்.
குலோத்துங்க சோழனின் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும், கலிங்க மன்னன் அனந்தவர்மன் என்ற மன்னனுக்கும் இடையில் கலிங்கத்தில் நடந்த போர்செய்தியையும் அதில் வெற்றி பெற்ற கருணாகரத் தொண்டைமானின் சிறப்புகளையும் கூறுவதாக இன்னூல் அமைந்துள்ளது.
கலிங்கத்துப் பரணி பாடப்பட்டுள்ள முறை
கலிங்கத்துப் பரணி கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது, கோயில் பாடியது, தேவி பாடியது, பேய் பாடியது எனும் வரிசையில் பாடப்பட்டுள்ள முறையில் காடு பாடியது இயலின் கீழ் பாடல் -21 இல் வெள்ளாறு பாடப்பட்டுள்ளது. இந்த வெள்ளாறு இங்கு ஆறாகவும் ஊராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கலிங்கத்துப் பரணியில் பாடப்பட்டுள்ள ஊர்கள்
கலிங்கத்துப் பரணியில் வெள்ளாறு உடன் மேலும் பல ஊர்கள் பாடப்பட்டுள்ளன. அவை: அதிகைமாநகர், அளத்தி, இலங்கை,உதகை, கச்சி, கடாரம், கம்பிலி, கலிங்கம், காந்தளூர்ச் சாலை, குருமி, கூடற்சங்கமம், கொப்பை, கோட்டாறு, சக்கரக்கோட்டம், சிங்களம், திமிரி, தென்மதுராபுரி, நவிலை, பல்லவநாடு, மணலூர், மண்ணை, மதுரை, மயிலை, மலைநாடு, மல்லை, மிதிலை, வண்டைநகர், வயிராகரம், வழிஞம், வெள்ளாறு.
இரு வெள்ளாறுகள்
வெள்ளாறு பெயரில் தமிழகத்தில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. தென்வெள்ளாறு, வட வெள்ளாறு. வட வெள்ளாறு செழிப்பான நீரோட்ட ஆறு. தென் வெள்ளாறு வறண்ட பாலை நில ஆறு. கலிங்கத்துப் பரணியில் பாடப்படும் வெள்ளாறு பாலை நிலம். இங்கு காடு என்பது சுடுகாடாகவும், பாலை நிலமாகவும் பாடப்பட்டுள்ளது. இதிலிருந்து கலிங்கத்துப் பரணியில் பாடப்பட்டுள்ள வெள்ளாறு தென் வெள்ளாறான புதுக்கோட்டை நகரத்திற்கும் தெற்கில் ஓடும் வெள்ளாறு என்று அறுதியிட முடிகிறது.
இதை உறுதிப்படுத்த கலிங்கத்துப் பரணி காடு பாடியது கீழ் பாடப்பட்டுள்ள முழு பாடல்களையும் பார்ப்போம்.
பாடல் - 1
கலிங்கப்போரில் உயிர்ப்பலி ஏற்பட்டு
கொழுப்பும் நிணநீரும் ஓடியதில் பேய்கள் அதில் சோறாக்கி உண்டு களித்தன.
களப்போர் விளைந்த கலிங்கத்துக் கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்உளப்போ ரிரண்டு நிறைவித்தாள் உறையுங் காடு பாடுவாம்.
பாடல் - 2
காரைச்செடிகள், சூரை மரங்கள், வீரை மரங்கள், எரிந்த மூங்கில் மரங்கள், மேல்பட்டை உரிந்த பாரை மரங்கள், காய்ந்த ஓமை மரங்கள் கொண்ட காடு
பொரிந்த காரைக ரிந்த சூரைபு கைந்த வீரையெ ரிந்தவேய்உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே.
பாடல் - 3
கனிகள் உதிர்ந்த விளா மரங்கள், உலர்ந்த நெல்லி மரங்கள், குறுகிய துள்ளிச்செடிகள். உலர்ந்த வேல மரங்கள், பிளந்த முள்ளிச்செடிகள், முதிர்ந்த வள்ளிக்கொடிகள், பிளந்த கள்ளி மரங்கள் கொண்ட நிலம்.
உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ டுங்கு துள்ளியு லர்ந்தவேல்பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப பரந்தவே
பாடல் - 4
உலர்ந்த வாகை மரங்கள், வற்றிய கூகை மரங்கள், உலர்ந்த தேற்றா மரங்கள், சிதைந்த வேல மரங்கள், முதிர்தலையுடைய இண்டங்கொடி, உலர்ந்த மூங்கில், முரிந்த புன்கை மரங்கள் வரிசையாய் இருக்கும் நிலம்
வற்றல் வாகைவ றந்த கூகைம டிந்த தேறுபொ டிந்தவேல்முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே.
பாடல் - 5
காட்டில் உள்ள அனைத்து மரங்களின் நிழலும் சூடு பொறுக்க முடியாமல் மரத்தின் வேரில் ஒளிந்துகொண்டதால் சூரியன் தன் கதிர்களால் தேடுகிறது.
தீய வக்கொடிய கான கத்தரைதி றந்த வாய்தொறுநு ழைந்துதன் சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே.
பாடல் -6
வெப்பம் பொறுக்க முடியாமல் நிழல் அஞ்சி ஓடி மறைகிறது.
ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல் அஞ்சி யக்கடுவ னத்தைவிட்டோடு கின்றநிழ லொக்கும் நிற்கும்நிழல் ஓரி டத்துமுள வல்லவே
பாடல் -7
இப்படியாகச் செல்லும் பாடல்களில்
நிலம் வெடித்து பாலையாகவும் அந்த வெடிப்பில் சூரியவெளி நுழைகிறது.
பாடல் - 8
ஆகாயத்தில் பருந்து வட்டமிடுவதாகவும் அதன் நிழல் பாலை நிலத்தில் விழுந்து சூடு பொறுக்க முடியாமல் ஓடுகிறது.
பாடல் -9
பாலை நிலத்தில் நிற்கும் மரங்கள் தண்ணீரில்லாமல் தன் நிழலையே அருந்துகிறது.
பாடல் - 10
வெப்பத்தால் பூமி செந்நிறமுடைய தகடு ஆகிறது.
பாடல் -11
வெப்பத்தால் மான்களின் வாய் வெந்து தீயின் வாயைப் போல சிவந்து அதன் வாயிலிருந்து ஒழுகும் நீரை பருகுகிறது.
பாடல் -12
இத்தகைய பாலை வெப்பத்தைக் கண்டு தேவர்களே பயங்கொள்கிறார்கள்.
பாடல் -13
பகலில் பாலை நிலத்தைக் கடக்கும் சூரியக் குதிரைகள் பாலையின் வெப்பத்தை தணித்துக்கொள்ள இரவு ஓடாது ஓய்வு கொள்கிறது.
பாடல் -14
கருமேகமும் நிலவும் பாலை நிலத்தைக் கடக்க முடியாமல் ஓடி வியர்வையை பனிநீராக வடியவிடுகிறது.
பாடல் -15
தேவர்கள் பாலை வெப்பத்தைப் பொறுக்க முடியாமல் நிலவை விசிறியாக வீசிக்கொள்கிறது.
பாடல் -16
பாலையில் நீரற்று, உணவற்று பசியால் மெலிந்த பேய்கள் மெலிந்து வாயின் ஈரம் உலர்ந்து, நாக்குகளை நீட்டுவது மரப்பொந்துகளிலிருந்து பாம்பு நாக்கை நீட்டுவதைப் போலிருந்தது.
பாடல் - 17
பாலை நீறு பூத்த புகை மூடிய சாம்பலாக இருக்கிறது. அதற்குள் பிணங்களின் ஆபரணங்கள் வெளியே எட்டிப்பார்க்கிறது.
பாடல் -18
பாலை நிலத்திலுள்ள மூங்கில் முத்துகளை உதிர்ப்பது நிலத்தின் வெம்மையைக் கண்டு மனமுருகி கண்ணீர் சிந்துவதைப் போலிருக்கிறது.
பாடல் -19
இந்த நிலத்தில் சிந்தி கிடக்கும் முத்துக்கள் பார்க்க கொப்புளங்கள் போலிருக்கிறது.
பாடல் - 20
பல கால்களைக் கொண்டு, உறுதியான கைகளால் கரையை மோதித் திரும்பும் கடலலைகள், அடர்ந்த காடுகளில் பாயும் வெப்பமான காற்றை, அதன் வெப்பம் வராமல் தடுக்கின்றன.
பாடல் -21
"முள்ளா றும் கல்லாறுந் தென்ன ரோட
முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூட
வெந்தவன மிந்தவன மொக்கி லொக்கும்"
இப்பாடல் தரும் பொருள்;
வாளாயுதம் ஏந்திய முதலாம் குலோத்துங்க சோழன் முன்பு ஒரு சமயத்தில் பாண்டியர்களுடனான போரில் பாண்டியர்கள் தோற்று முட்களை உடைய வழிகளிலும், கற்களை உடைய வழிகளும் ஓட்டமெடுக்க வெள்ளாறு எனும் ஊரும் கோட்டாறு எனும் ஊரும் புகையால் மூட அந்த ஊர்கள் வெந்து வெந்த காடுகளால் அந்நிலம் பாலைவனம் ஆனது.
செயங்கொண்டார் பாடிய வெள்ளாறு
இரு வெள்ளாறுகளில் வட வெள்ளாறு சேலம் மாவட்டத்தில் பச்சை மலை, கொல்லி மலைகளில் உற்பத்தியாகி கடலூர் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இதே பெயருடைய மற்றொரு தென் வெள்ளாறு திருச்சிராப்பள்ளி வேழ மலையில் உற்பத்தியாகி புதுக்கோட்டை நிலப்பகுதியில் ஓடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கோட்டாறு என்பது கன்னியாக்குமரிக்கும் வடக்கில் பத்து மைல் தூரத்தில் ஓடுகிறது.
முதலாம் குலோத்துங்கன் வட நாடான கலிங்கம் நாட்டின் மீது போர்த்தொடுத்து அந்நாட்டை வென்ற பின்பு அவன் தென்னாடான பாண்டிய நாடு மீது போர்த்தொடுத்தான். இப்போரில் பாண்டியன் இறந்து சோழன் வென்றான்.
செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாடுகையில் கலிங்கப் போர் வெற்றியோடு பாண்டியனை வெற்றிக்கண்டதையும் பாடுகிறார்.
செயங்கொண்டார் பாடியது வட வெள்ளாறா, தென் வெள்ளாறா?
வட வெள்ளாறு சோழ நாட்டில் ஓடுகிறது. வளமான ஆறு இது.
தென்வெள்ளாறு பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் எல்லையாகப் பிரிக்கிறது. ஆயினும் இந்த ஆறு பெரும்பகுதி ஓடியது பாண்டிய நாட்டில்தான்.
கலிங்கத்துப்பரணி காட்சியின்படி பாண்டிய நாட்டில் ஓடிய ஆறுதான் பாலை நிலமாகவும் வெப்பத்தில் தகிக்கும் நிலமாகவும் மேலும் பாண்டியன் தோற்கடிக்கப்பட்டப் பின்னர் புழுதியும் புகையும் மூடிய ஆறாகவும் ஓடுகிறது.
இந்த ஆற்றோடு இதற்கும் தென்பகுதி கன்னியாகுமரி பகுதியில் ஓடும் கோட்டாறையும் காட்சிப்படுத்துவதன் மூலம் இந்த வெள்ளாறு புதுக்கோட்டை நகரத்திற்கும் தெற்கில் ஓடும் ஆறுதான் என்றும் அந்த ஆற்றையொட்டி அமைந்துள்ள ஊர்களையே செயங்கொண்டார் வெள்ளாறு ஊர் என்றும் குறிப்பிடுகிறார்.
வெள்ளாறு பெயர்க்காரணம்
வெள்ளம் என்றால் பெருக்கம் என்று பொருள். வெள்ளம் ஆறு என்பதே வெள்ளாறு. அதாவது மழை காலத்தில் பெருக்கெடுக்கும் ஆறு என்பதால் அதற்கு அப்படியொருபெயர். இந்தப் பெயர்க் காரணம் வட வெள்ளாறுக்குப் பொருந்தும்.
மற்றொரு காரணப் பெயர்
தண்ணீரில்லாமல் வெள்ளையாக காய்ந்து கிடக்கும் ஆறு வெள்ளாறு. மழை இல்லாமல் நீரில்லாம் எரிக்கும் வெயிலுக்கு வெள்ளை வெயில் என்று பெயர். இதிலிருந்து தென் வெள்ளாறு வெள்ளை ஆறு - வெள்ளாறு ஆகிறது.
புதுக்கோட்டை வரலாறு எழுதிய கே. ஆர் வெங்கடராம அய்யர் எழுதிய A MANUAL OF THE PUDUKOTTAI எனும் நூலில் வெள்ளாறு White River என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இந்தப் பெயர்க் காரணமே புதுக்கோட்டை வெள்ளாறுக்கு பொருந்துகிறது.
தென் வெள்ளாறு - சிறு பார்வை
தென் வெள்ளாறு புதுக்கோட்டை நிலப்பகுதியில் ஓடும் ஆறுகளில் நீளமானது. இந்த ஆறு வேழமலையில் தோன்றுகிறது. இந்த மலை மன்னராட்சி காலத்தில் மருங்காபுரி ஜமீன் நிலமாக இருந்தது. அதாவது திரு்ச்சிராப்பள்ளி மாவட்டம் , குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட மலை இது. இந்த மலையில் தோன்றும் ஆறு புதுக்கோட்டை நிலப்பகுதியில் ஓடி மணமேல்குடிக்கும் அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த ஆறு பாயும் தூரம் சுமார் 85 மைல்கள். இந்த ஆறுதான் குளத்தூர், ஆலங்குடி, திருமயம் எனும் ஊர்களை மூன்று தாலுகாவாக பிரிக்கிறது. அதாவது இந்த ஆற்றுக்கு வட கரை குளத்தூர், ஆலங்குடி தாலுகா. தென்கரை திருமயம் தாலுகா. (பழைய தாலுகா முறை)
இந்த நதிக்கு வடமொழியான சமஸ்கிருதம் வேறொரு பெயரைச்.சூட்டியிருக்கிறது. இது குறித்தும் இந்த வெள்ளாற்றை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ள ஒரு முக்கியமான புராணம் குறித்தும் அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.



கருத்துகள்
கருத்துரையிடுக